பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற யோசனைக்கு விரும்பத்தக்க பிரதிபலிப்பு இல்லை - சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 24, 2020

பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற யோசனைக்கு விரும்பத்தக்க பிரதிபலிப்பு இல்லை - சுமந்திரன்

(நா . தனுஜா) 

பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற யோசனையை இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன்வைத்த போதிலும் அதற்கு விரும்பத்தக்க வகையிலான பிரதிபலிப்பு எதுவும் காண்பிக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் தற்போதை நிலவரம் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராய்வதற்கான அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. 

இக்கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பில் எம்.ஏ. சுமந்திரன் கூறியிருப்பதாவது, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நானும் ரவூப் ஹக்கீமும் விரைவாகப் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தோம். 

தற்போதைய சூழ்நிலையில் பெருமளவானோர் ஒரே இடத்தில் சந்திப்பது உகந்ததல்ல என்ற போதிலும், மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதற்கும் பொறுப்புக் கூறலை வெளிப்படுத்துவதற்கும் பாராளுமன்றம் இயங்குவது அவசியமாகும். 

எனினும் இந்த முன்மொழிவிற்கு விரும்பத்தக்க வகையிலான பிரதிபலிப்பு கிடைக்கப் பெறவில்லை. மாறாக கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியான சந்திப்புக்களை மேற்கொண்டு, நிலவரம் குறித்து ஆராய வேண்டும் என்ற எனது யோசனைக்கு கூட்டத்தில் ஆதரவான பிரதிபலிப்பு வெளிப்படுத்தப்பட்டது என்றார்.

No comments:

Post a Comment