வதந்திகளுக்கு ஏமாறாதீர்கள், பொருட்களின் விலைகள் குறைவடையும் - கொரோனாவை கட்டுப்படுத்த சகல நடவடிக்கைகளும் அரசு முன்னெடுப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, March 16, 2020

வதந்திகளுக்கு ஏமாறாதீர்கள், பொருட்களின் விலைகள் குறைவடையும் - கொரோனாவை கட்டுப்படுத்த சகல நடவடிக்கைகளும் அரசு முன்னெடுப்பு

கொரோனா வைரஸ் தொடர்பில் பரப்பப்படும் வதந்திகளுக்கு மக்கள் ஏமாறக்கூடாதென்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர், இன்று அரசாங்க விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனைப் பயன்படுத்தி தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன என்றும் அதேவேளை உணவுப் பொருட்களுக்கு எத்தகைய தட்டுப்பாடும் விலையதிகரிப்பும் ஏற்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.

அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இன்றைய தினம் அரசாங்க விடுமுறை மட்டுமே. சகல அரச மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் வழமைபோன்று இடம்பெறும்.

பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் அல்லது வர்த்தக நிலையங்கள் மூடப்படுமென எவரும் அஞ்சத் தேவையில்லை. அவ்வாறு இடம்பெறாது. நுகர்வோருக்கு இந்த அசௌகரியமும் இடம்பெறாமல் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிகமான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்கவே இன்றைய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது பஸ், ரயில்கள் உள்ளிட்ட பெருமளவிலானோர் பயணம் செய்யும் வாகனங்களிலும் வைரஸ் பரவும் நிலையுள்ளதாக என்பதை இனங்காண்பதற்கும் அரச நிறுவனங்களில் மக்கள் கூடும் இடங்களில் இவ்வாறு வைரஸ் பரவும் நிலையுள்ளதா என்பதை அவதானிப்பதற்காகவே விடுமுறை வழங்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் வதந்திகள் பரப்புவதில் சிலர் ஈடுபட்டுள்ளதால் அது தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்படவேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அதற்கிணங்க எந்தவொரு நோயாளியும் இதுவரை இலங்கையில் மரணமடையவில்லை. 

மதத் தலைவர்கள் நேற்றையதினம் அதிகம் மக்கள் கூடும் வகையில் வழிபாடுகளை மேற்கொள்வதில்லை என்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். இதற்கிணங்க, தம்மாலங்கார தேரர், பேராயர் கர்தினால் மல்கம் ரன்ஜித் ஆண்டகை இஸ்லாமிய மதத்தலைவர்கள் பலரும் மக்கள் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். நேற்றைய தினம் ஆலயங்களில் திருப்பலிப்பூஜை தடைசெய்யப்பட்டிருந்த நிலையில் பொதுவாக பேராயர் இல்லத்திலிருந்து நேரடி ஒளிபரப்பாக தொலைக்காட்சிகளில் திருப்பலிப்பூஜை ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதற்கிணங்க சிவனொளிபாதமலை யாத்திரை உட்பட அதுபோன்ற மக்கள் அதிகமாக கூடும் யாத்திரைகள் வழிபாடுகளை தவிர்ப்பது சிறந்தது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு எந்தவித தடையுமேற்படாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் புறக்கோட்டை வர்த்தக சங்கத்தினர் மற்றும் இறக்குமதியாளர்கள் சங்கம் ஆகியன உறுதியளித்துள்ளன. இந்த நிலையில் அது தொடர்பில் பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். எதிர்வரும் புத்தாண்டு விற்பனைக்காக நாளை மறுதினம் புதன்கிழமை முதல் பொருட்களின் விலைகள் மேலும் குறைவடையலாம்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், பெருமளவு ஊழியர்கள் பணிபுரியும் ஆடைத்தொழிற்சாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவ்வாறு சட்டபூர்வமாக எந்த அறிவித்தலும் விடப்படவில்லை. எனினும் ஆடைத்தொழிற்சாலை உரிமையாளர்களிடம் அது தொடர்பில் அரசாங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

நாணயத்தாள்கள் மூலமும் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எமது நாட்டில் அவ்வாறு இடம்பெற வாய்ப்பில்லை. சில வெளிநாடுகளில் நாணயத் தாள்கள் மிக மோசமான அழுக்காக உபயோகப்படுத்தப்படுவதால் அத்தகைய நாடுகளில் அவ்வாறு ஏற்படலாமே தவிர எமது நாட்டில் அவ்வாறு நாணயத்தாள்கள் மூலம் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பில்லையென்று அவர் மேலும் தெரிவித்தார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad