எமது கட்சியின் அடித்தளமே இல்லாத சாய்ந்தமருதில் ஒட்டுமொத்த ஒன்பது உறுப்பினர்களும் இணைந்தமையால் கிழக்கில் பெரும் மாற்றம் ஏற்படப் போகிறது - News View

About Us

About Us

Breaking

Monday, March 2, 2020

எமது கட்சியின் அடித்தளமே இல்லாத சாய்ந்தமருதில் ஒட்டுமொத்த ஒன்பது உறுப்பினர்களும் இணைந்தமையால் கிழக்கில் பெரும் மாற்றம் ஏற்படப் போகிறது

கல்முனை மாநகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சாய்ந்தமருது சுயேச்சைக் குழு (தோடம்பழம்) உறுப்பினர்கள் நேற்று தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டனர். 

சாய்ந்தமருது ஜும்ஆபள்ளிவாசல் தலைவர் ஹனீபா தலைமையில் நடந்த இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் முன்னாள் செயலாளர் சலீம், இலங்கைக்கான சவூதி அரேபியாவின் முன்னாள் கொன்சியூலர் ஜெனரலும் கட்சியின் பிரதித் தலைவருமான டாக்டர் உதுமாலெவ்வை மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் டாக்டர் சியா, ஜோர்தானுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் லாபீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது "பேர்ள்" வரவேற்பறை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுயேச்சைக் குழு உறுப்பினர்கள் ஒன்பது பேரும் தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் கரங்களைப் பலப்படுத்தும் பொருட்டு எதிர்கால அரசியலை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்தனர். 

இங்கு நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த கட்சியின் தலைவர் அதாஉல்லா எமது பிரச்சினைகளை நாங்களே தீர்த்தக் கொள்ள வேண்டும் என்பதுதான் எமது கொள்ளை. அண்ணன் தம்பிபோலும், அயல்வீட்டு உறவினர்கள்போன்றும் சகவாசமுள்ள எமது சமூகங்களின் பிரச்சினைகளை ஒஸ்லோ, சட்டாஹிப், டோக்கியோ சென்று தீர்க்கத் தேவையில்லை. பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவே கட்சித் தலைமைகள் பணியாற்ற வேண்டும்.

ஆனால் சில தலைமைகள் பிரச்சினைகளைப் பெரிதாக்கி, பிரதேசவாதங்களை வளர்த்து அரசியலில் பிழைப்பு நடத்துகின்றன. இச்சந்தர்ப்பவாத அரசியலுக்கு கிழக்கு வாழ் சமூகங்கள் இனியும் இடமளிக்கப்போவதில்லை.

தேர்தல் காலங்களில் வாக்குகளுக்காக சமூகங்களைச் சீண்டிவிடல், சூடாக்குதல் போன்ற நடவடிக்கைகளில் எமது கட்சி ஈடுபடாது. அரசாங்க காரியாலயங்கள் எங்கெங்கு அமைய வேண்டும் என்பது எமக்குத் தெரியும்.

சாய்ந்தமருது மக்கள் விரும்பினால் அக்கரைப்பற்றிலுள்ள நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்தியக் காரியாலயத்தை உடன் சாய்ந்தமருதுக்கு கொண்டு வரத்தயார். அரச முகாமைத்துவங்கள், சமூக இருப்புக்கள், பிராந்திய வளங்களைப் பாதுகாப்பதுதான் எமது பணி.

சத்தியம் வெல்லும் என்ற நம்பிக்கையில் நாங்கள் முன்னெடுத்த இந்தப் பணிகள் இன்று வெற்றி பெற்று வருகின்றன. இதற்கு சாய்ந்தமருதுவில் நடந்துள்ள மாற்றம் சிறந்த உதாரணம். எமது கட்சியின் அடித்தளமே இல்லாத இவ்வூரில், ஒட்டுமொத்தமாக ஒன்பது உறுப்பினர்களும் இணைந்தமையால் கிழக்கில் பெரும் மாற்றம் ஏற்படப் போகிறது.

சாய்ந்தமருதுக்கான நகர சபை மட்டுமல்ல இப்பகுதியில் எதிர்பார்க்கப்படும் சகல உள்ளூராட்சி சபைகளும் வெல்லப்படும். இன்னும் இரண்டு வருடங்களில் இவை சாத்தியமாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ராஜகிரிய நிருபர்

No comments:

Post a Comment