கட்சிகளின் ஐக்கியம் தொடர்பாக பேசுவது வாக்குகளை சூறையாடுவதற்காக மாத்திரமே - அமைச்சர் டக்ளஸ் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 5, 2020

கட்சிகளின் ஐக்கியம் தொடர்பாக பேசுவது வாக்குகளை சூறையாடுவதற்காக மாத்திரமே - அமைச்சர் டக்ளஸ்

கட்சிகளின் ஐக்கியம் தொடர்பாக பேசுவது வாக்குகளை சூறையாடுவதற்காக மாத்திரமே என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்று வவுனியா வாடி வீட்டில் இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும் தனித்து போட்டியிடுவது தொடர்பாகவும், கூட்டு சேர்ந்து போட்டியிடுவது தொடர்பாகவும், ஆசனங்களை பிரிப்பது தொடர்பாகவும் அரசியல் கட்சிகள் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஈ.பி.டி.பியை பொறுத்த வரை வடக்கு கிழக்கில் வீணை சின்னத்தில் போட்டியிடும் நிலைப்பாட்டில் உள்ளோம். இதேவேளை எங்களது கட்சியின் கொள்கைகள், அரசியல் இலக்குகளை ஒரு பொது நோக்கில் ஏற்றுக் கொள்ளக் கூடிய பிராந்திய கட்சிகளுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கிறோம். 

இனிவரும் காலங்களில் மக்கள் தங்களுடைய பிரச்சினைகளை உணர்ந்தவர்களையும் நடைமுறை சாத்தியமாக அனுகுபவர்களையும் தெரிவு செய்ய வேண்டும்.

எனக்கு கடந்த காலத்தில் ஆயுத போராட்டத்திலும், தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டதிலும் அனுபவம் இருக்கின்றது. இவ்வளவு அனுபவங்கள் இருந்தும் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க முடியாததற்கு காரணம் தமிழ் தலைமைகளே ஆகும். 

தமிழ் தலைமைகளுக்கு பிரச்சினைகளை தீர்ப்பது நோக்கமல்ல மாறாக பிரச்சினைகளை தீரா பிரச்சினையாக வைத்திருப்பதே அவர்களின் நோக்கமாகும். அதன் அடிப்படையிலேயே அவர்களது அணுகுமுறை உள்ளது.

மக்கள் எங்களுக்கு தருகின்ற அரசியல் பலத்துக்கு ஏற்ற வகையிலேயே எங்களாலும் பிரச்சினைகளை தீர்க்க முடியும். நாங்கள் ஒரு கட்டத்தில் ஆயுதம் தூக்கி போராடியவர்களே. அப்போதும் எங்களது மூத்த தலைவர்கள் பிரச்சினைக்கான தீர்வை தரவும் இல்லை கையாளவும் இல்லை.

எங்களுடைய ஆயுத போராட்டமும் சரியான வகையில் கையாளப்படவில்லை. இலங்கை - இந்திய ஒப்பந்தமும் ஒரு பொன்னான வாய்ப்பாகும். அதனை ஏற்றுக்கொண்டிருந்தால் இத்தனை அழிவுகளும் இந்த நிலைமைகளும் ஏற்பட்டிருக்காது.

தென்னிலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் எமது ஐக்கியத்தை காட்ட வேண்டும் என்பதற்காக பல வருடங்களாக ஐக்கியத்தை பற்றி கதைத்திருக்கிறார்கள். இது எல்லாம் தேர்தலில் வாக்குகளை அபகரிக்கும் சுய இலாப நோக்கத்தோடுதான். 

கடந்த காலத்தில் இருந்து தற்போது வரை ஐக்கியத்தை பற்றி பேசப்பட்டு வருகிறது. அதனால் எமக்கு கிடைத்தது பூச்சியம் மட்டுமே அது பின்னடைவுக்கே கொண்டு சென்றிருக்கிறது.

ஆகவே ஐக்கியம் என்பதை விட ஒவ்வொரு கட்சிகளும் தங்களுடைய கொள்கைகளை மக்களிடையே வைத்து மக்களுடைய ஆணையை பெற்று அதன் பின்னர் ஐக்கியப்படுபவர்களே. 

ஆனால் மக்களுடைய பிரச்சினையை தீர்க்கலாமே தவிர அதை விடுத்து ஐக்கியம் தொடர்பாக பேசுவதானது பழைய குருடி கதவை திறடி என்றதாகத்தான் அமையும். இன்று ஐக்கியத்தை பற்றி பலரும் கதைத்து வருகிறார்கள் அது வாக்கை சூறையாடுவதற்கான யுத்தியே ஆகும் என மேலும் தெரிவித்தார்.

வவுனியா விஷேட நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad