கொரோனா வைரஸ் இறப்பு விகிதம் நாடுகளுக்கு இடையில் வேறுபடுவதற்கு காரணம் என்ன? - News View

About Us

About Us

Breaking

Thursday, March 26, 2020

கொரோனா வைரஸ் இறப்பு விகிதம் நாடுகளுக்கு இடையில் வேறுபடுவதற்கு காரணம் என்ன?

கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழக்கும் வாய்ப்பு 0.5% - 1% இருப்பதாக பிரிட்டன் அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசகர்கள் நம்புகின்றனர்.

கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டவர்களின் பொதுவான இறப்பு விகிதத்தை விட இது குறைவாக உள்ளது.

உலகளவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 4 சதவீதமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தரவுகள் கூறுகின்றன. பிரிட்டனில் மார்ச் 23ஆம் திகதி வரை இறப்பு விகிதம் 5 சதவீதமாக இருந்தது. ஏனெனில், அனைத்து தொற்றுகளும் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்படுவதில்லை.

யார் யாருக்கெல்லாம் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற முடிவை அந்தந்த நாடுகளே எடுக்கின்றன. அதனால், ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது அந்நாட்டின் இறப்பு விகிதத்தை தரவுகளுக்காக எடுத்துக் கொள்ள முடியாது.

மேலும் இறப்பு விகிதம் என்பது ஒருவருடைய வயது, உடல் நலம் மற்றும் அவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை கிடைத்திருக்கிறது போன்றவற்றை பொருத்ததாகும்.

என்னென்ன அபாயங்கள் உள்ளன?

கொரோனா வைரஸ் தொற்றால் வயதானவர்கள் மற்றும் உடல் நலம் சரியில்லாதவர்கள் உயிரிழக்கும் அபாயம் அதிகம் உள்ளது.

80 வயதுக்கு மேலானவர்கள் இறப்பு விகிதம் சுமார் 10 முறை அதிகமாக இருப்பதாகவும், அதுவே 40 வயதிற்கு கீழ் இருப்பவர்களின் இறப்பு விகிதம் குறைந்து காணப்படுவதாகவும் லண்டன் இம்பீரியல் கல்லூரி கணக்கீடுகள் கூறுகின்றன.

"வயதானவர்களுக்கான இறப்பு விகிதம் அதிகமாக இருந்தாலும், பெரும்பான்மையான முதியவர்களை, மிதமான அளவிலேயே கொரோனா தாக்கியுள்ளது. அதே நேரத்தில் இது இளம் வயதினரை தாக்காது என்று கூறமுடியாது. இளம் வயதை சேர்ந்த சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று எச்சரிக்கிறார் பிரிட்டன் அரசாங்கத்தின் தலைமை மருத்துவ ஆலோசகர் பேராசிரியர் கிரிஸ் விட்டி.

இந்த கொரோனா தொற்றின் ஆபத்தை தீர்மானிப்பது வயது மட்டுமல்ல

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் 44,000 பேரை ஆய்வு செய்ததில், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் அல்லது மூச்சுப் பிரச்சினை இருந்தவர்கள் மத்தியிலேயே ஐந்து முறை அதிகம் உயிரிழப்புகள் நேர்ந்தது தெரிய வந்தது.

இந்த காரணிகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது. எந்தெந்த இடத்தில் எந்த மாதிரியான நபர்கள் அபாயத்தில் இருக்கிறார்கள் என்ற தெளிவு இதுவரை இல்லை.

கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதில் இதுவரை உயிரிழந்தவர்களை வைத்துப் பார்த்தால் யார் மிகுந்த அபாயத்தில் இருக்கிறார்கள் என கூற முடியும் என்றாலும், இதனை துல்லியமாக கூறுவது கடினமாகும்.

கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் இடையே இருக்கும் இறப்பு விகிதம், ஒட்டு மொத்த இறப்பு விகிதம் கிடையாது.

வைரஸ் தொற்று இருக்கும் பலர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது கிடையாது. ஏனெனில் லேசான அறிகுறிகள் இருக்கும் பலரும் மருத்துவரிடம் செல்வது கிடையாது.

பிரிட்டனில் மார்ச் 17 வரை சுமார் 55,000 பேருக்கு கொரோனா தொற்று இருக்கும் என கணக்கிடுவதாக அந்நாட்டின் தலைமை அறிவியல் ஆலோசகர் சர் பாட்ரிக் வாலன்ஸ் தெரிவித்தார். ஆனால் அப்போது உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2,000க்கு கீழ்தான் இருந்தது.

உயிரிழப்புகளை 2,000 த்தால் வகுப்பது, 55,000 ஆல் வகுக்கப்படுவதை விட அதிக இறப்பு விகிதத்தை உங்களுக்கு வழங்கும்.

இந்த காரணத்தினால்தான் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களிடையே இருக்கும் இறப்பு விகிதங்கள் உண்மையான இறப்பு விகிதங்களின் மோசமான மதிப்பீடாகும்.

இறப்பு விகிதங்கள் நாடுகளுக்கு இடையில் ஏன் வேறுபடுகின்றன?

வெவ்வேறு நாடுகள், லேசான கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பவர்களை கண்டுபிடிக்க சிறப்பாக அல்லது மோசமாக செயல்படுவதால் இந்த வேறுபாடு இருப்பதாக இம்பீரியல் கல்லூரி ஆய்வு கூறுகிறது.

ஒவ்வொரு நாடும் கொரோனா தொற்று பரிசோதனைகளுக்கு வெவ்வேறு முறைகளை பின்பற்றுகின்றன. அதேபோல ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள சோதனை செய்யும் திறனில் வேறுபாடு உண்டு. மேலும், யாரெல்லாம் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற விதிகளும் வேறுபடும். அதோடு, இவை அனைத்தும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றமடையும்.

உதாரணமாக பிரிட்டன் அரசாங்கம், ஆரம்பக்கட்டத்தில் நாள் ஒன்றுக்கு சோதனை செய்வோரின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. நான்கு வாரத்தில் அதை 25,000 ஆக்க வேண்டும் என்பதே நோக்கம். தற்போது மருத்துவமனைகளில் உள்ளவர்களே அங்கு பரிசோதிக்கப்படுகிறார்கள்.

நாள் ஒன்றுக்கு 20,000க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யும் திறன் ஜெர்மனியிடம் இருக்கிறது. வைரஸ் தொற்றின் லேசான அறிகுறி இருப்பவர்களுக்கும் அந்நாடு பரிசோதனை செய்கிறது.

அதனால் ஜெர்மனியில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களிடையே காணப்படும் இறப்பு விகிதம் ஐரோப்பிய நாடுகளிலேயே குறைவானதாகும். ஆனால், பரிசோதனை செய்யப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை மாற்றமடைவதால் இந்த விகிதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் எந்த விதமான சிகிச்சை அளிக்க வாய்ப்பிருக்கிறது, அதனை சுகாதாரத்துறை அளிப்பது சாத்தியமா, மேலும், வைரஸ் தொற்று பரவுதல் எந்த கட்டத்தில் இருக்கிறது என்பதையும் இது சார்ந்திருக்கிறது.

அதிகளவிலான நபர்கள் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவுகளில் அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கும் கருவிகள் இல்லை என்றாலும், இறப்பு விகிதம் உயரும்.

உண்மையான இறப்பு விகிதத்தை விஞ்ஞானிகள் எவ்வாறு கணக்கிட முடியும்?

இந்த கேள்விகள் ஒவ்வொன்றையும் பற்றிய தனிப்பட்ட ஆதாரங்களை ஒன்றிணைத்து இறப்பு விகிதத்தின் கணக்கீட்டை விஞ்ஞானிகள் உருவாக்குவார்கள்.

இறப்பு விகிதம் அதிகமாகலாம் அல்லது குறைவாகவும் ஆகலாம் என்கிறார் ஈஸ்ட் அங்க்லியா பல்கலைக்கழகத்தின் மருத்துவ பேராசிரியர் பால் ஹன்டர்.

"இபோலா வைரஸை பொறுத்தவரை தொடர்ந்து சிகிச்சை அளிக்க ஒரு கட்டத்தில் இறப்பு விகிதம் குறைந்தது. ஆனால், அவை உயரவும் செய்யலாம்" என்று அவர் கூறுகிறார்.

அதனால், குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச தரவுகளுடன், தற்போதைய சிறந்த மதிப்பீட்டையும் வழங்குகிறார்கள்.

பிபிசி தமிழ்

No comments:

Post a Comment