கொரோனாவிலிருந்து உயிரைக் காப்பாற்ற எதிர்கொள்ளும் துன்பமானது, தமிழர்கள் செய்த தியாகங்களுக்கு ஈடாகுமா ? இதற்கு காரணம் யார் ? - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 25, 2020

கொரோனாவிலிருந்து உயிரைக் காப்பாற்ற எதிர்கொள்ளும் துன்பமானது, தமிழர்கள் செய்த தியாகங்களுக்கு ஈடாகுமா ? இதற்கு காரணம் யார் ?

நாட்டு மக்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதொரு சூழ்நிலை காணப்படுகின்றது. இது அரசாங்கம் எங்கள்மீது திணிக்கவில்லை. நாங்களே இதனை வலிந்து பெற்றுக்கொண்டோம்.

கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்கும்பொருட்டு மக்களை ஒன்றுகூட வேண்டாமென்று அரசாங்கம் வலியுறுத்தியதுடன், அதற்கு ஏதுவாக அனைத்து அரச, தனியார் காரியாலயங்களுக்கு விடுமுறை வழங்கியது.

ஆனால் அந்த விடுமுறையை உல்லாச பிரயாணத்துக்காகவும், நண்பர்களினதும், குடும்பங்களினதும் ஒன்றுகூடலுக்காக பயன்படுத்தினோம்.

சுற்றுலா இடங்களில் வைரஸ் தொற்றுவதற்குரிய சாத்தியங்கள் உள்ளது என்று தெரிந்திருந்தும், அவ்விடங்களுக்கே சென்றோம்.

இதன் விபரீதத்தை உணர்ந்த அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததுடன், அதனை கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இதனால் நாளாந்தம் கூலித் தொழில் செய்பவர்கள் அந்திம நிலைக்கு சென்றுள்ளதுடன், பணம் உள்ளவர்களுக்கு உணவுகளை கொள்வனவு செய்யமுடியாத நிலையும், ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்களின் நிலை தலைகீழாகவும் மாறியுள்ளது.

நாட்டில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் தமிழ் மக்கள் அடைந்த துன்பங்களுடன் ஒப்பிடுகையில் இது சாதாரணமானது
அப்போது வடகிழக்கு மாகாணங்களில் மூன்றில் இரண்டு பகுதி நிலப்பரப்பு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கே பல இலட்சம் மக்கள் புலிகளின் நிருவாகத்தின்கீழ் வாழ்ந்தார்கள்.

அரச கட்டுப்பாட்டிலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்தது. அத்தியாவசிய உணவுப் பொருட்களை தவிர, கட்டடம் கட்டுவதற்கான பொருட்கள், உரம், சவர்க்காரம், எரிபொருட்கள் உற்பட ஏராளமான பொருட்களை அப்பிரதேசங்களுக்குள் கொண்டு செல்ல முடியாது

அவ்வாறு அனுமதிக்கப்பட்ட பொருட்கள் யாழ் குடாநாட்டுக்கு கப்பல் மூலமாக ஏற்றிச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. தரை போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டிருந்ததனால் வன்னிப் பிரதேசத்துக்கு எந்தவித பொருட்களும் எடுத்துச் செல்ல முடியாது.

கப்பல் மூலம் எடுத்துச் செல்லப்படும் பொருட்கள் யாழ் குடாநாட்டில் வாழ்ந்த இலட்சக்கணக்கான மக்களுக்கு போதுமானதாக இருக்கவில்லை.

மண்ணெண்ணெய் ஒரு போத்தல் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட காலங்களில், அங்கே காப்போத்தலின் விலை முன்னூறு ரூபாயாகும். வசதி படைத்த ஒரு சிலரால் மட்டுமே ஒரு போத்தல் வாங்க முடியும். பெரும்பாலான ஏழைகளால் காப்போத்தல் வாங்குவதும் ஒரு பாரிய சவாலாகும்.

இதனால் காலையில் சூரியன் உதயத்துடன் எழும்புவதும், சூரியனின் மறைவோடு வீட்டுக்குள் அடங்குவதுமாக அவர்களது வாழ்வு இருந்தது.

சவர்க்காரம் தடை செய்யப்பட்டதனால் குளிப்பதற்கும், ஆடைகள் சுத்தம் செய்வதற்கும் பனம்பழத்தையே பாவித்தார்கள். கரி, சாம்பல், வேப்பமர குச்சியினால் பல் துலக்கினார்கள்.

ஒரு நாளைக்கு மூன்று நேர உணவு என்பது கற்பனை பண்ணிப் பார்க்க முடியாததொன்றாக இருந்தது. பணம் படைத்தவர்கலால்கூட உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலையில் உணவுத் தட்டுப்பாடு இருந்தது.

நூறு ரூபாய்க்கு ஏழு தேங்காய்கள் விற்கப்பட்ட காலங்களில் அங்கே ஒரு பாதி தேங்காயின் விலை இருநூறு ரூபாய் ஆகும்.

பொதுவாக திறந்தவெளி சிறைக்கூடமாக இருந்தாலும், சில இடங்களில் ஒரு வீதியில் வசிப்பவர்கள் மற்றைய வீதிக்கு செல்ல முடியாத நிலை இருந்தது.

இவைகள் எல்லாம் ஒருபுறமிருக்க எந்த நேரத்தில் எறிகணை வந்து விழும் என்றும், எப்போது விமானக் குண்டு வீசப்படுமென்று தெரியாத பீதியில் அவர்களது வாழ்வு இருந்து.

இந்த நிலை ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் அல்ல. பல தசாப்தங்கள் இவ்வாறு தமிழ் மக்கள் வாழ்ந்தார்கள். அவ்வாறான ஒரு தியாகமான வாழ்க்கையுடன் ஒப்பிடுகையில் இன்று நாங்கள் அவ்வாறானதொரு நிலையை அடையவில்லை.

தாங்கள் உரிமையை பெற்றுக் கொள்வதற்காக தமிழ் மக்கள் இவ்வளவு பெரிய தியாகத்தை செய்தார்கள். ஆனால் நாங்களும், எங்களது சந்ததிகளும் உயிர் வாழ்வதென்றால் அதனையும் விட பெரிய தியாகம் செய்வதற்கு நாங்கள் தயாராக வேண்டும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments:

Post a Comment