மார்ச் 31 ஆம் திகதி வரை யாரும் வெளியே வர வேண்டாம் - அனைத்து மக்களையும் தனிமைப்படுத்த ஆர்ஜென்டினா ஜனாதிபதி உத்தரவு - News View

Breaking

Post Top Ad

Thursday, March 19, 2020

மார்ச் 31 ஆம் திகதி வரை யாரும் வெளியே வர வேண்டாம் - அனைத்து மக்களையும் தனிமைப்படுத்த ஆர்ஜென்டினா ஜனாதிபதி உத்தரவு

ஆர்ஜென்டினாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வரும் 31 ஆம் திகதி வரை மக்கள் அனைவரும் கட்டாயம் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ், 9800க்கும் மேற்பட்ட மனித உயிர்களை காவு வாங்கி உள்ளது. தொடர்ந்து அதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால், வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்படுகின்றன. 

கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் இல்லாததால், மக்களை தனிமைப்படுத்தி வைப்பது மட்டும்தான் இப்போதைக்கு சிறந்த நிவாரணம். எனவே, லேசான வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்டாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். 

இந்நிலையில், கொரோனா பரவி உள்ள ஆர்ஜென்டினா நாட்டில் அனைத்து மக்களும் வரும் 31 ஆம் திகதி வரை தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

‘நள்ளிரவு முதல் மக்கள் அனைவரும் தடுப்பு மற்றும் சமூக தனிமையில் இருக்க வேண்டும். யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். இந்த நடவடிக்கை மார்ச் 31 வரை இருக்கும்’ என ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ் அறிவித்துள்ளார்.

‘இந்த நடைமுறையை பாதுகாப்புத் துறையினர் கண்காணித்து உறுதி செய்வார்கள். உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் மக்கள் வெளியே செல்லலாம். ஆனால், யாராக இருந்தாலும் வீட்டை விட்டு வெளியேறினால் அதற்கான காரணத்தை பாதுகாப்பு படையினரிடம் தெரிவிக்க வேண்டும்’ என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ஜென்டினாவில் இதுவரை 128 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மற்ற நாட்டு மக்கள் நுழையாதபடி 15 நாட்களுக்கு எல்லைகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு 30 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad