முறைப்பாடு கிடைக்கப் பெற்றால்தான் நடவடிக்கை எடுக்கப்படுமா? இது என்ன சட்டம் - News View

About Us

About Us

Breaking

Friday, February 28, 2020

முறைப்பாடு கிடைக்கப் பெற்றால்தான் நடவடிக்கை எடுக்கப்படுமா? இது என்ன சட்டம்

(செ.தேன்மொழி) 

சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் வகையில் வெளிவந்துள்ள காணொளி தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரித்த அவர் மேலும் கூறியதாவது, சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களுடாக வெளியிடப்பட்டு வருகின்றது. இந்த காணொளியிலே வயது வந்த ஒருவர் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவது பதிவாகியுள்ளது. 

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்புக் கொண்டு வினவினால் தங்களுக்கு இன்னும் முறைப்பாடு கிடைக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர். 

சமூக வலைத்தளங்களுடாக பரவி வரும் இந்த விவகாரம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப் பெற்றால்தான் நடவடிக்கை எடுக்கப்படுமா? இது என்ன சட்டம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்கவும் மேலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்காகவும் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறான சூழ்நிலைகளில் முறைப்பாடுகள் கிடைக்கும் வரை இயங்காது இருக்கும் சட்டம், முடிவுற்ற வழக்கு தொடர்பிலும் குரல் பதிவுகள் தொடர்பிலும் முறைப்பாடு கிடைக்காவிட்டாலும் இயங்குகின்றது. 

இந்த விடயம் தொடர்பில் எமக்கு கவலையளிக்கின்றது. சம்பந்தப்பட்ட நபரே துணிச்சலுடன் காணொளியை பதிவு செய்து வெளியிட்டுள்ள நிலையில் அவரை கைது செய்யாமல் இருப்பது நியாயமற்ற செயலாகும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment