சஜித் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின்னர் மேற்கொண்ட முதலாவது தீர்மானம் மக்கள் விரோத தீர்மானமாகும் - News View

Breaking

Post Top Ad

Monday, February 24, 2020

சஜித் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின்னர் மேற்கொண்ட முதலாவது தீர்மானம் மக்கள் விரோத தீர்மானமாகும்

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

கடன் எல்லையை அதிகரிக்க எதிர்க்கட்சி ஆதரவளிக்காதமை மக்கள் விரோத தீர்மானமாகும். வரலாற்றில் எந்த எதிர்க்கட்சியும் இவ்வாறு செயற்பட்டதில்லை என இலங்கை கம்யூனிஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார். 

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுடன் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் மற்றும் அந்த அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல கடந்த அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட நிதி சில சந்தர்ப்பங்களில் போதாமல் இருக்கலாம். 

அவ்வாறான கட்டங்களில் இடைக்கால கணக்கறிக்கையொன்றை சமர்ப்பித்து அதனை பாராளுமன்றத்தில் சம்மதித்துக் கொள்வார்கள். அதுதான் பாராளுமன்ற சம்பிரதாயம். கடந்த 1947 ஆம் ஆண்டில் இருந்து அனைத்து அரசாங்கங்களும் இந்த முறையையே பின்பற்றிவருகின்றன. 

ஆனால் கடந்த வியாழக்கிழமை ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருந்த கணக்கறிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் உட்பட எதிர்க்கட்சியினர் ஆதரவளிக்க மறுத்துள்ளனர். அதனால் அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காமலே அதனை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது. 

சஜித் பிரேமதாச எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின்னர் மேற்கொண்ட முதலாவது தீர்மானம் மக்கள் விரோத தீர்மானமாகும் என்று சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad