எம்மை பலவீனப்படுத்தலாம் என சிலர் பகல் கனவு காண்கின்றனர், அவர்கள் கனவு காணட்டும் - News View

About Us

About Us

Breaking

Monday, February 24, 2020

எம்மை பலவீனப்படுத்தலாம் என சிலர் பகல் கனவு காண்கின்றனர், அவர்கள் கனவு காணட்டும்

"இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை எந்த சந்தர்ப்பத்திலும் அசைக்க முடியாது. எம்மை பலவீனப்படுத்தலாம் என சிலர் பகல் கனவு காண்கின்றனர். அவர்கள் கனவு காணட்டும். முன்வைத்த காலை பின்வைக்காது நாம் எமது பயணத்தை தொடர்கின்றோம்." என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

நானுஓயா சமர்செட் ஈஸ்டல் தோட்டத்தில் இன்று (24) 50 தனி வீடுகளை அமைக்க அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, "2002 இல் நுவரெலியாவிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தை கைப்பற்றுவதற்கு ஒருவர் முயற்சித்தார். அதன்போது இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு 2003 இல் எனக்கும், ஏனைய சிலருக்கும் எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த நபரால் வழக்கு தொடுக்கப்பட்டது.

எனினும், 18 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு வெளியானது. அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நான் விடுதலை செய்யப்பட்டுள்ளேன். எனவே, வாய்மையே வெல்லும் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

ஐயா காலத்தில் பொதுச்செயலாளராக இருந்தவர் அவரின் முதுகில் குத்திவிட்டு காங்கிரஸிலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் ஏனைய ஐவர் சென்றனர். அண்மையில் கூட சிலர் கட்சி தாவினார்கள். ஆனால், எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை அசைக்க முடியாமல் போனது.

காங்கிரஸையோ அதன் சொத்துகளையோ அசைக்க முடியாது என்பது பலமுறை உறுதியாகியுள்ளது. அப்படி நடக்கும் என கனவு காண்பவர்கள் தாராளமாக காணட்டும். நாம் எமது வேலைகளை செய்வோம்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகளை எடுத்துக்கொண்டால் வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளிலேயே அன்னத்துக்கு அதிகம் வாக்குகள் விழுந்தன. எனினும், ஐந்தாண்டுகள் நாம் அவர்களுடன் இருந்ததால் சிறுபான்மையினத்தவர்கள் இருவருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன.

நாம் எதிரணியில் இருந்தபோதும் மலையக மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்து ஆதரவு வழங்கினார்கள். எனவே, முன்வைத்த காலை பின்வைக்காது சமூகத்துக்கான எமது சேவைகள் தொடரும்.

மலையகத்துக்கு தனிப்பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான இடத்தை கண்காணிப்பதற்காக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன எதிர்வரும் 29 ஆம் திகதி அட்டனுக்கு வரவுள்ளார்.

அதேவேளை, நான் ஒருமையில் கதைப்பதாக ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நான் எனது மகன் உட்பட குடும்ப உறுப்பினர்களுடன் சாதாரணமாக வா, போ என்றே உரையாற்றுவேன். மக்களாகிய நீங்களும் என் சொந்தங்கள். அதன்காரணமாகவே உரிமையுடன் ஒருமையில் விளிக்கின்றேன். " - என்றார்.

(ஹற்றன் நிருபர் - கிரிஷாந்தன்)

No comments:

Post a Comment