காணாமல் போனோரின் குடும்பங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ள குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு முற்றாக நிராகரிப்பு - News View

Breaking

Post Top Ad

Saturday, February 22, 2020

காணாமல் போனோரின் குடும்பங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ள குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு முற்றாக நிராகரிப்பு

பலவந்தமாக காணாமல் போனோரின் குடும்பங்கள் மற்றும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்கள் இலங்கை பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினரால் தகவல் திரட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளதை பாதுகாப்பு அமைச்சு முற்றாக மறுக்கின்றது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியாக பொறுப்பேற்றது முதல் பலவந்தமாக காணாமல் போனோரின் குடும்பங்கள் மற்றும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்கள் தொடர்பில் இலங்கை பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் தகவல்களை திரட்டப்பட்டும் கண்காணித்தும் வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேற்குறிப்பிட்ட நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுக்கும் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரட்ன, வழக்கமாக முன்னெடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு செயற்பாடுகளைத் தவிர பாதுகாப்பு படையினரோ புலானாய்வுப் பிரிவினரோ எந்தவொரு நபரையோ குறிப்பிட்ட குழுக்களையோ கண்காணிக்கும் நடவடிக்கையில் ஒரு போதும் ஈடுப்படவில்லை என்றார். 

காணாமல் போனோர் குடும்பத்தினரை இலக்கு வைத்து கண்காணிக்க எந்தவொரு நடவடிக்கைகளிலும் பாதுகாப்பு படையினரோ அல்லது பொலிஸாரோ ஈடுப்படுத்தப்படவில்லை என்றார். 

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு பாதுகாப்பு தரப்பினரும் பொலிஸாரும் தயார் நிலையில் உள்ளனரோ தவிர இலங்கையிலுள்ள எந்தவொரு தரப்பினரையோ குழுவினரையோ இலக்கு வைத்து செயற்படுவதில்லை. 

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கருத்தின் பிரகாரம் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் ஆறு இடங்களில் பலவந்தமாக காணாமல் போனோரின் உறவினர்களுடன் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் செயலாற்றி வருகின்றனர். இந்நிலையில் அரசாங்கம் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

“விஷேடமாக காணாமல் போனோரின் குடும்ப உறவினர்களை கண்காணிப்பது தொடர்பில் எந்த நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வதில்லை. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரை இலக்கு வைத்து அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு படையினருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன சுட்டிக்காட்டினார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற சம்பவங்கனை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டும் தேசிய பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையிலும் எதிர் கால பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்கும் வகையிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதுவரை செயலிழந்து போய் இருந்த புலனாய்வு வலையமைப்பு தற்பொழுது பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார். 

இலங்கையின் பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வு துறையினரும் பயமுறுத்துவதாக காணாமல் போனோர் குடும்ப உறுப்பினர்களும் அவர்களுக்கு ஆதரவாக செயற்படும் செயற்பாட்டாளர்களும் கூறும் தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என நியூயோர்க்கை தளமாக கொண்டு செயற்படும் உரிமைகளுக்கான அமைப்பான மனித உரிமை கண்காணிப்பகமிடம் பாதுகாப்புச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad