ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் நிலைப்பாடு முற்றிலும் தவறானது - இதுவே பொதுத் தேர்தலில் பாரிய வெற்றியினை பெற்றுக் கொடுக்கும் - News View

Breaking

Post Top Ad

Friday, February 28, 2020

ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் நிலைப்பாடு முற்றிலும் தவறானது - இதுவே பொதுத் தேர்தலில் பாரிய வெற்றியினை பெற்றுக் கொடுக்கும்

(இராஜதுரை ஹஷான்) 

இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஆணையாளரது நிலைப்பாடு தவறானதுடன், ஒருதலைப்பட்சமானது என சுற்றுலாத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்தார். 

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணை இலங்கை அரசியலமைப்பிற்கும், இறையாண்மைக்கும் எதிரானது. என்பதை எதிர்க்கட்சியாக செயற்படும் காலத்தில் இருந்து குறிப்பிட்டோம். 

ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டுக்கு எதிரான பிரேரணைகள் மற்றும் ஒப்பந்தங்களில் இருந்து விலகிக் கொள்வோம். என்று பெரும்பாண்மை மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம். அதன் பிரகாரமே ஜெனிவா பிரேரணையில் இருந்து விலகினோம். 

அரசாங்கம் பிரேரணையில் இருந்து விலகியதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் முற்றிலும் தவறானதுடன், ஒருதலைப்பட்சமானது. 

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலை தொடர்ந்து சந்தேகத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பிலும் நிறைவடைந்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாதமை குறித்தும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் தவறானதாகும். இவ்விரு விடயங்களும் இலங்கையின் உள்ளக விவகாரங்களாகும். 

நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் விடயங்களுக்கு ஒருபோதும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அனுமதி வழங்கமாட்டார். இதுவே பொதுத் தேர்தலில் பாரிய வெற்றியினை பெற்றுக் கொடுக்கும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad