சாதி, மதங்களை கடந்து இனத்தின் விடுதலை பற்றி சிந்திக்ககூடியவர்களாக மாற வேண்டும் - News View

Breaking

Post Top Ad

Sunday, February 23, 2020

சாதி, மதங்களை கடந்து இனத்தின் விடுதலை பற்றி சிந்திக்ககூடியவர்களாக மாற வேண்டும்

மதங்களின் பெயரில் இடம்பெறும் வன்முறைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ள ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுரேன் குருசாமி மதவாதத்தை தூண்டுபவர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

அன்மைய நாட்களாக வடக்கு கிழக்கில் மதவாத ரீதியான கருத்து மோதல்கள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பல்லின மக்களும் பல சமயத்தவர்களும் வாழும் இந்த நாட்டில் தனித்துவமும் சகிப்புத்தன்மையுடனும் வாழும்போதுதான் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்க முடியும். அதைவிடுத்து மதத்தின் பெயரிலோ இனத்தின் பெயரிலோ மேலாதிக்கத்தையோ வன்முறைகளையோ பிரயோகிக்கும் மனப்பாங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

குறிப்பாக நாம் வாழும் நாட்டிலேயே இரண்டாம் தர பிரஜைகளாக நடத்தப்படும் தமிழர்களாகிய நாம் எமக்குள் மதங்களின் பெயரால் மோதிக்கொள்வது எம்மை மேலும் பலவீனப்படுத்திவிடும். பல்வேறு மதங்களை பின்பற்றும் நாம் எமது சமயத்தை சரியாக பின்பற்றி மதத்தின் சித்தாந்தங்களை சரியாக கற்றுக்கொண்டால் பிறிதொரு மதத்தை ஆக்கிரமிக்கவோ வன்முறைகளை பிரயோகிக்கவோ முற்பட மாட்டோம். 

நாடு தீர்க்கமான பொதுத் தேர்தல் ஒன்றை சந்திக்கவுள்ள நிலையில் சில அரசியல் வாதிகள் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிடும் செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் நிலையில் அவர்களின் எதிர்பார்ப்புக்கோ அல்லது சுயநல அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குள்ளோ நாம் சிக்கிவிடமால் தமிழினம் எதிர்நோக்கியுள்ள அரசியல் நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான தீர்க்கமான முடிவுகளை எடுக்கக்கூடியவர்களாகவும் சாதி, மதங்களை கடந்து இனத்தின் விடுதலை பற்றி சிந்திக்ககூடியவர்களாகவும் மாற வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad