உம்ரா பயணத்துக்கு தடை - சவூதி தூதரகம் அறிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, February 27, 2020

உம்ரா பயணத்துக்கு தடை - சவூதி தூதரகம் அறிவிப்பு

உம்ரா பயணத்துக்கான விஸா வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியிருப்பதாகவும், மறு அறிவித்தல் வரை இந்த இடைநிறுத்தம் நீடிக்குமெனவும் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் துரிதமாக பரவுவதுடன் 27 நாடுகளில் அது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதன் காரணமாக சவூதி அரசு உலகளாவிய ரீதியிலிருந்து உம்ராவுக்கு வரும் யாத்திரிகர்களை தற்காலிகமாக தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 

முஸ்லிம் சமய விவகார திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அஷ்ரபிடமும் இலங்கை அரச ஹஜ் குழுத் தலைவர் மர்ஜான் பழீலிடமும் தொடர்புகொண்டு கேட்ட போது சவூதி அரேபியாவிடமிருந்தோ, கொழும்பிலுள்ள சவூதி தூதரகத்திடமிருந்தோ தங்களுக்கு உத்தியோகபூர்வமான அறிவித்தல் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தனர்.

அப்படியொரு அறிவிப்பு உத்தியோகபூர்வமாக கிடைக்கப் பெற்றால் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் (இன்று) நேற்றுக் காலை கூட இலங்கையிலிருந்து ஒரு குழு உம்ரா பயணத்தை மேற்கொண்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை கொழும்பில் உள்ள சவூதி தூதுவர் அப்துல் நசார் அல்- ஹார்த்தி தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் துரிதமாகப் பரவும் நிலையில் உம்ரா பயண விசா வழங்குவதை நேற்று முதல் இடை நிறுத்தியுள்ளது. உலகிலுள்ள 27 நாடுகளில் ஏற்கனவே பரவியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஒரு தடுப்பு நடவடிக்கையாக சவூதி அரசாங்கம் உம்ரா பயண விசா வழங்குவதை நிறுத்தியுள்ளது.

நிலைமை சீரடையும் வரை எடுக்கப்படும் தற்காலிக நடவடிக்கை இதுவாகும்.

மேற்படி தற்காலிகத் தடையை தளர்த்தும் நோக்கில் கொரோனா வைரஸ் தொடர்பாக உலகளாவிய நிலையை சவூதி அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றார்.

இதேவேளை கொழும்பு விமான நிலைய தகவல்களின்படி நேற்று காலை 225 உம்ரா பயணிகள் ஜெத்தாவுக்கு பயணமாகினர். மாலைதீவில் இருந்து 175 பயணிகளும் கொழும்பில் இருந்து 50 பயணிகளும் இக்குழுவில் இருந்ததாக தெரியவருகிறது.

எம்.ஏ.எம். நிலாம்

No comments:

Post a Comment

Post Bottom Ad