ஏறாவூர்ப்பற்றில் தொடரும் சட்ட விரோத மண் அகழ்வுகள் - அதிகாரிகளும், பொலிஸாரும் துணை - News View

Breaking

Post Top Ad

Thursday, February 27, 2020

ஏறாவூர்ப்பற்றில் தொடரும் சட்ட விரோத மண் அகழ்வுகள் - அதிகாரிகளும், பொலிஸாரும் துணை

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள சந்தனமடு பகுதியில் இரவு பகலாக தொடர்ச்சியாக சட்ட விரோத மண் அகழ்வுகள் நடைபெறுவதாகவும் அவற்றினை தடுக்க நடவடிக்கையெடுக்குமாறும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர், ஏறாவூர் பொலிஸார் உட்பட பல்வேறு தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையிலும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இக்கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இந்த ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மு.முரளிதரன், கிரான் சிறுதயங்கல் விவசாய அமைப்பின் தலைவர் சி.வவானந்தன் ஆகியோர் இதன்போது கருத்து தெரிவித்தனர்.

இலக்கத்தகடுகள் அற்ற உழவு இயந்திரங்களிலும் சட்ட விரோதமான மண் அகழ்ந்து கொண்டு செல்லப்படுவதாகவும் அவற்றினை வீதியில் சோதனையில் ஈடுபடும் பொலிஸார் கூட தடுப்பதில்லையெனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் பிரதேச செயலகத்தினால் மண் அகழ்வதற்கு தடை என போடப்பட்ட பகுதிகளிலும் மண் அகழ்வுகள் நடைபெறுவதாகவும் இங்கு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பகுதிகளில் இடம்பெறும் மண் அகழ்விற்கு அதிகாரிகளும் பொலிஸாரும் துணைபோவதாகவும் இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இதேநேரம் குறித்த பகுதிகளில் நடைபெறும் சட்ட விரோத மண் அகழ்வுகளை தடுத்து நிறுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் இதன்போது தெரிவித்தார்.

மண் அகழ்வுகள் தடுத்து நிறுத்தப்படும் என அபிவிருத்திக் குழுத் தலைவர் கூறிய போதிலும் இதுவரையில் எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad