பொதுத் தேர்தலில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வெற்றி பெற்று தொடர்ந்து பத்து வருடங்கள் ஆட்சி செய்யும் - சமூகத்தினை கட்டியெழுப்ப வேண்டிய தார்மீக பொறுப்பு எங்களுக்கு உள்ளது - News View

About Us

About Us

Breaking

Thursday, February 27, 2020

பொதுத் தேர்தலில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வெற்றி பெற்று தொடர்ந்து பத்து வருடங்கள் ஆட்சி செய்யும் - சமூகத்தினை கட்டியெழுப்ப வேண்டிய தார்மீக பொறுப்பு எங்களுக்கு உள்ளது

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வெற்றி பெற்று தொடர்ந்து பத்து வருடங்கள் பயணம் செய்யும் என்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் மிகவும் வறிய நிலையிலுள்ள குடும்பத்திற்கான வீட்டிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் வடக்கு கிழக்கில் இரண்டு விதமான வீட்டுத் திட்டம் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் கிராமத்திற்கு ஒரு வீட்டு என்ற எண்ணக்கருவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 345 கிராம சேகவர் பிரிவில் வீடுகள் அமைப்பதற்கு சுமார் இருபது கோடிக்கு மேற்பட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண் பிள்ளைகள் அதிகம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ள வறிய குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்கி வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றது. அத்தோடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் சப்ரிகம என்ற வேலைத் திட்டத்தின் மூலம் மாவட்டத்திற்கு 69 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட உள்ளது. சில இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சின் ஊடாக ஐம்பத்தி ஏழு கோடியே அறுபது இலட்சம் நிதி பன்னிரண்டு இலட்சத்து எண்பதாயிரம் வீட்டுத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட நூற்றி ஐம்பதுக்கு மேற்பட்ட வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கிலோ மீற்றர் கிராமிய வீதிகள் உள்ள நிலையில் ஐம்பதாயிரம் வீதிகள் மாத்திரம் புனரமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை புனரமைப்பு செய்யும் வேலைத் திட்டத்தில் முதல் கட்டமாக இருபத்தையாயிரம் கிலோ மீற்றர் வீதிகள் புனரமைக்கும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது.
தற்போதைய அரசாங்கம் கடந்த காலத்தில் ஆட்சி செய்த போது பாலங்கள், வீதிகள் என்பவற்றை அமைத்தனர். அதுபோன்று இந்த ஆட்சியிலும் பாலங்களை அமைக்கும் திட்டங்களை கொண்டுவர உள்ளனர். எனவே தற்போதைய அரசாங்கம் குறைந்தது பத்து வருடங்களுக்காவது பயணிக்கும் அதில் எந்த மாற்றமும் இல்லை.

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தற்போதைய அரசாங்கம் வெற்றி பெறும். தொடர்ந்து பத்து வருடங்கள் இந்த அரசாங்கம் பயணம் செய்யும் போது எமது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேவையான மக்கள் நலன் திட்டங்களை கொண்டு வந்து எங்களால் முடிந்த அளவிற்கு எமது சமூகத்தினை கட்டியெழுப்ப வேண்டிய தார்மீக பொறுப்பு மக்கள் தலைவர்களாகிய எங்களிடத்தில் உள்ளது. எனவே அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும் என்றார்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள்இ செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வீடு நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பிக்கும் முகமாக முதல் கட்ட நிதி வழங்கி வைக்கப்பட்டதுடன், குறித்த பயனாளியின் வீட்டில் தென்னங் கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டது.

எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment