டெல்லியில் கட்டுப்பாட்டை மீறி தீவிரமடையும் கலவரம் - நீ இந்துவா? முஸ்லிமா? - வன்முறைக்கு வித்திட்டவர் பா.ஜ.க எம்.பி கபில் மிஸ்ரா - News View

Breaking

Post Top Ad

Thursday, February 27, 2020

டெல்லியில் கட்டுப்பாட்டை மீறி தீவிரமடையும் கலவரம் - நீ இந்துவா? முஸ்லிமா? - வன்முறைக்கு வித்திட்டவர் பா.ஜ.க எம்.பி கபில் மிஸ்ரா

இந்தியத் தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தம் (சி.ஏ.ஏ) எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையேயான மோதலில் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. 

நேற்றைய தகவல்களின்படி 25 பேர் வரை இவ்வன்முறைகளில் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இம்மோதல்களில் 250 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ஷாகீன் பாக் பகுதியில் 2 மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அது நிறைவேறவில்லை.

இந்த நிலையில், டெல்லியின் வடகிழக்கு பகுதிகளிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. ஆனால் இந்தப் போராட்டங்களுக்கு பா.ஜ.க உள்ளிட்ட சி.ஏ.ஏ ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது மிகப் பெரும் வன்முறையாக வெடித்தது. 
வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகளில் இரு சமூகங்களிடையேயான மோதலாக இது மாறியது. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மிக கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். பல பத்திரிகையாளர்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்களிடம் நீ இந்துவா? முஸ்லிமா? எனக் கேட்டும் தாக்கியுள்ளனர்.

பத்திரிகையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. டெல்லி வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

டெல்லியில் 4 நாட்களாக நீடிக்கும் இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா செவ்வாயன்று நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். நள்ளிரவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சம்பவ இடங்களைப் பார்வையிட்டார். வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அங்கு துணை இராணுவப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியான தகவல்களில் முதலில் குழப்பம் நிலவியது. பின்னர் டெல்லி பொலிசார், "வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்" என அறிவுறுத்தியதன் மூலம் அத்தகவல் உறுதி செய்யப்பட்டது.
இதேவேளை டெல்லியில் வன்முறைக்குக் காரணமாக பா.ஜ.க தலைவர் கபில் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் என்று கோரி ஹைதராபாத்தில் உள்ள மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியில் பல வீடுகள், கடைகளை அடித்து நொருக்கி கலவரக்கார்கள் சூறையாடி உள்ளார்கள். கண்ணில் படுபவர்களை எல்லாம் தாக்கும் மோசமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. வீதிகளில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் பா.ஜ.க எம்.பி கபில் மிஸ்ரா, சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிராக பேசியதுதான் வன்முறைக்கு வித்திட்டதாக புகார் எழுந்துள்ளது. அவரை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்களை கண்டித்து ஹைதராபாத்தில் உள்ள மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர். போராட்த்திற்கு அழைப்பு விடுத்துள்ள இந்த மாணவர்கள், டெல்லியில் வன்முறைக்கு காரணமாக பா.ஜ.க தலைவர் கபில் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
உயர்நீதிமன்றம் கண்டனம்
நாட்டில் இன்னொரு 1984 கலவரத்தை அனுமதிக்க முடியாது என்று டெல்லி வன்முறைகளை விசாரித்த உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. டெல்லி வன்முறைகள் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் விசாரித்தார். இந்த விசாரணையின் போது நீதிபதி முரளிதரன் கூறியதாவது:

டெல்லி மக்களுக்கு இசட் பிரிவைப் போன்ற பாதுகாப்பு வழங்க வேன்டும். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். டெல்லி மக்களுடன் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி உதவ வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய முகாம்களை அமைக்க வேண்டும். அப்பகுதி மக்களின் உதவிக்காக அவசர 24 மணிநேர உதவி எண் வசதியை ஏற்படுத்துவது குறித்து ஆராய வேண்டும். நாட்டில் 1984ம் ஆண்டு போல இன்னொரு கலவரத்தை அனுமதிக்க முடியாது. டெல்லி வன்முறைகளில் ஐ.பி அதிகாரி உயிரிழந்திருப்பது துரதிருஷ்டவசமானது. மத்திய மாநில அரசு அதிகாரிகள், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும். இவ்வாறு நீதிபதி முரளிதரன் கூறினார்.

"அமெரிக்காவில்தான் சரமாரியாக துப்பாக்கியுடன் திரியும் காட்சிகளை அதிகம் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் டெல்லியில் யாரைப் பார்த்தாலும் சரளமாக துப்பாக்கியை பிடித்துச் சுட ஆரம்பித்திருக்கிறார்கள். இதைத் தடுக்கத் தவறியதுதான் டெல்லி பொலிஸ் செய்த மிகப் பெரிய தவறு" என்கிறார்கள் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.

"அமெரிக்கா போன்ற நாடுகளின் மோசமான துப்பாக்கிக் கலாசாரம் டெல்லியில் அதுவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வசம் உள்ள உள்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி பொலிஸாரின் கண்ணுக்கு நேராகவே சுதந்திரமாக உலா வருவது அதிர வைப்பதாக உள்ளது.

இந்தியாவின் தலைநகரா இது? உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று நம்மை நாமே மார் தட்டிக் கொள்கிறோமே... அந்த நாட்டின் இதயமா இப்படி? அன்று காந்தியைச் சுட்ட துப்பாக்கி இன்று கண்ணில் படுபவரை எல்லாம் சுட்டுக் கொண்டிருக்கிறது" என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

"டெல்லி கலவரத்தில் ஏகப்பட்ட இளைஞர்கள் கையில் துப்பாக்கி புழங்குகிறது. எப்படி இவர்களுக்கு துப்பாக்கி கிடைக்கிறது? யார் விநியோகம் செய்கிறார்கள்? ஏன் இப்படி துப்பாக்கியுடன் வெறி பிடித்து அலைகிறார்கள் என்று யாருக்குமே புரியவில்லை. இவர்களைத் தடுக்கக் கூடவா டெல்லி பொலிஸாரால் முடியவில்லை? அப்படி ஒரு பலவீனமான படையா நமது தலைநகரை காத்து நிற்கிறது?" என்று அதிர்ச்சியுடன் அவர்கள் கூறுகிறார்கள்.

"ஜெய் ஸ்ரீராம் என்பதை பயங்கரமான அச்சமூட்டும் சொல்லாக மாற்றி விட்டனர். உண்மையான இந்துக்கள் இதனால் மனம் நொந்து போய் உள்ளனர். இராமர் பெயரைச் சொல்லி அக்கிரமம் செய்கிறார்களே" என்று அவர்கள் மனதுக்குள் புழுங்கிக் கிடக்கின்றனர்.

"வாஜ்பாய் போன்ற மாமேதைகள் கோலோச்சிய கட்சியின் பெயரால் நடைபெறும் ஆட்சியில் இதுபோல நடப்பது வாஜ்பாய்க்கும் சேர்த்துதானே கெட்ட பெயரைக் கொடுக்கும்!" என்று பலர் அங்கலாய்க்கிறார்கள்.

"முதலில் இந்த துப்பாக்கிக் கலாசாரத்தை டெல்லி பொலிஸ் கடும் நடவடிக்கை எடுத்து ஒழிக்க வேண்டும்.சிறுவர்கள் கையில் துப்பாக்கியுடன் வெறித்தனமாக போவதைப் பார்க்கும் போது அந்த மகனைப் பெற்ற தாய் எப்படி துடித்துப் போயிருப்பாள்?இதை ஏன் பொலிஸ்துறை வேடிக்கை பார்க்கிறது என்பதுதான் புரியவில்லை?

டெல்லி பொலிசார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கி துப்பாக்கிகளுடன் திரிபவர்களை பிடித்து உள்ளே போட வேண்டும். கடுமையான சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் எவர் என்ற பாரபட்சமே இல்லாமல் நேர்மையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்" என்று மக்கள் கூறுகிறார்கள். 
மோடியின் வேண்டுகோள்
டெல்லியில் நடைபெறும் வன்முறைகள் தொடர்பாக, 3 நாட்களுக்கு பிறகு முதன் முறையாக பிரதமர் நரேந்திர மோடி நேற்றுமுன்தினம் மௌனம் கலைத்துள்ளார். அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று அவர் ட்விட்டர் வழியாக கோரிக்கை விடுத்துள்ளார்.

"டெல்லியில் பல்வேறு பகுதிகளில் நிலவக் கூடிய சூழ்நிலை தொடர்பாக தீவிரமான ஆய்வு நடத்தி உள்ளேன். பொலிசார் மற்றும் பிற அமைப்புகள் அமைதியை நிலைநாட்டுவதற்கு களத்தில் நிற்கின்றன. அமைதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவை நமது முக்கியமான பண்புகள். 

எனவே, எனது சகோதர சகோதரிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அமைதி மற்றும் சகோதரத்துவம் எப்போதும் நிலைத்து இருக்க வேண்டும். முடிந்த அளவு விரைவாக அமைதி மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது முக்கியமானது" என்று பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

(OneIndiaTamil)

No comments:

Post a Comment

Post Bottom Ad