யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து அடாவடி செய்த ஐவருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 22, 2020

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து அடாவடி செய்த ஐவருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து மருத்துவ சேவையாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் 5 சந்தேக நபர்களை வரும் மார்ச் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடன் தொடர்புடையவர்கள் வைத்தியசாலைக்குள் புகுந்து மருத்துவ சேவையாளர்களைத் தாக்கியும் அச்சுறுத்தியும் உள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. 

அச்சுவேலி- தெல்லிப்பளை வீதியில் கடந்த 16 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் அதனைச் செலுத்திச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்துள்ளனர். 

எனினும் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இளவாலை பெரியவிளானைச் சேர்ந்த நட்சேத்திரம் றொடிசன் அயன் (வயது -34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சிகிச்சை பெற்றவர் உயிரிழந்த விடயத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் அவரது உறவினரான ஊழியர் ஒருவர், உயிரிழந்தவருடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். 

இந்நிலையில் நேற்றிரவு வைத்தியசாலைக்குள் புகுந்த 8 பேர் அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர். சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தவர் எவ்வாறு உயிரிழந்தார் என்று கேட்டு அவரது சகோதரன் உள்ளிட்டவர்களே இவ்வாறு அடாவடியில் ஈடுபட்டனர். 

சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் சகோதரன் உள்பட 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் இன்று மாலை முற்படுத்தப்பட்டனர். 

அரச சேவையாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர்கள் 5 பேருக்கும் எதிராக பொலிஸார் பி அறிக்கை தாக்கல் செய்தனர். மேலும் சிலர் கைது செய்யப்பட வேண்டியுள்ளனர் என்று பொலிஸார் மன்றுக்குத் தெரிவித்தனர். 

சந்தேக நபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் முன்னிலையானர். குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்த பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம், சந்தேகநபர்கள் 5 பேரையும் வரும் மார்ச் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 

சந்தேக நபர்கள் உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினர்கள் என்று மன்றுக்கு சுட்டிக்காட்டப்பட்டது. அதனால், உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்கு வசதியாக ஒரு மணி நேரம் அங்கு அவர்களை அழைத்துச் செல்ல சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பதில் நீதிவான் உத்தரவிட்டார். 

No comments:

Post a Comment