கடந்த அரசாங்கத்தினை பாதுகாத்த நமக்கு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளை தேசிய பாடசாலையாக மாற்ற முடியாமல் மாறடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது - News View

About Us

About Us

Breaking

Thursday, February 13, 2020

கடந்த அரசாங்கத்தினை பாதுகாத்த நமக்கு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளை தேசிய பாடசாலையாக மாற்ற முடியாமல் மாறடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது

ஒரு விடயத்தினை செய்யக் கூடியவர், செய்ய வைக்கக் கூடியவர் இருந்தால் செய்ய வைக்கலாம். செய்ய முடியாதவர்கள் இருந்தால் ஒன்றும் நடைபெறாது. இதுதான் கடந்த அரசாங்கத்தில் நடைபெற்ற சம்பவம் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.

கல்குடா கல்வி வலயத்திற்குட்ட வாழைச்சேனை இந்துக் கல்லூரி தேசிய பாடசாலைக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு மூலம் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலை பிரதான மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (14) காலை நடைபெற்ற போது கலந்து கொண்ட மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த அரசாங்கத்தினை பாதுகாத்த நமக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகளை தேசிய பாடசாலையாக மாற்ற முடியாமல் நான்கு வருடம் மாறடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால் வாழைச்சேனை இந்துக் கல்லூரி மாத்திரம் தப்பி பிழைத்து தேசிய பாடசாலை மாற்றம் பெற்றுள்ளது.
முஸ்லிம் மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 வீதம் இருந்தாலும் ஆறு தேசிய பாடசாலையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 வீதமாக இருக்கும் தமிழ் மக்களுக்கு ஏழு தேசிய பாடசாலைகள் மாத்திரம் உள்ளது. இந்த அரசாங்கத்தின் அறுபது நாள் வேலைத் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு தேசிய பாடசாலைகளை பெற்று வழங்கியுள்ளேன். நூறு நாட்களில் தேசிய பாடசாலையாக மாற்றம் பெறவுள்ளது.

ஒரு விடயத்தினை செய்யக் கூடியவர், செய்ய வைக்கக் கூடியவர் இருந்தால் செய்ய வைக்கலாம். செய்ய முடியாதவர்கள் இருந்தால் ஒன்றும் நடைபெறாது. இதுதான் கடந்த அரசாங்கத்தில் நடைபெற்ற சம்பவம். மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிபர், ஆசிரியர் பற்றாகுறையாக உள்ளது. அதிலும் குறிப்பாக கல்குடா வலயம், மட்டக்களப்பு மேற்கு வலயம் இரண்டிலும் 780 ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.
ஒரு சமூகத்தின் முன்னேற்றம், இருப்பு என்பவற்றுக்கு கல்வி, பொருளாதாரம் மேலோங்குமோ அந்த சமூகம் நிலையான சமூகமாக இருக்கும். இதனை செய்யும் பொறுப்பு அந்த சமூகத்தின் தலைவர்களிடத்தில் உள்ளது. நான் ஒரு ஆசிரியர். நான் அரசியலுக்கு அப்பால் ஆசிரியர் என்று சொல்வதற்கு சந்தோகசப்படுகின்றேன்.

கல்வியின் ஊடாக எமது சமூகம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். கல்வியால் வளர்ந்து, கல்வியால் அடையாளப்படுத்தப்பட்ட சமூகம் இன்று பின்னோக்கி செல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. கிழக்கு மாகாணத்தில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் மாணவர்கள் இடைவிலகுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐம்பது மாணவர்களுக்குட்பட்ட பாடசாலைகள் 110 க்கு மேல் உள்ளது. இதில் மாணவர்கள் குறையும் பட்சத்தில் மூன்று வருடத்தில் பாடசாலைகள் இழுத்து மூடும் நிலைமைக்கு வரும். இதனை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும்.
கல்குடா வலயத்திலுள்ள ஆசிரியர் பற்றாக்குறை இன்னும் ஓரிரு மாதங்களில் முழுமையாக தீர்த்து வைக்கப்படும். மாகாண ரீதியாக வழங்கப்படும் ஆசிரியர் நியமனத்தில் அந்த பகுதிக்கே நியமனம் வழங்கப்படும். எதிர்வரும் மார்ச் மாத இறுதிக்குள் வழங்கவுள்ள ஐம்பத்தி நான்காயிரம் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பில் முதலாவதாக ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்றார்.

வாழைச்சேனை இந்துக் கல்லூரி தேசிய பாடசாலை அதிபர் அ.ஜெயஜீவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் பு.அரோசன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாளேந்திரனின் பன்முகப்படுத்தப்பட்ட இரண்டு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

வாழைச்சேனை நிருபர் - எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment