போதிய அறிவும் அனுபவமும் இல்லாத எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாட்டால் 2019 நிலுவைகளை செலுத்த முடியாத நிலை - சபாநாயகரிடம் உத்தரவாதமளித்தால் பாராளுமன்றத்தை கூட்ட அரசு தயார் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 22, 2020

போதிய அறிவும் அனுபவமும் இல்லாத எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாட்டால் 2019 நிலுவைகளை செலுத்த முடியாத நிலை - சபாநாயகரிடம் உத்தரவாதமளித்தால் பாராளுமன்றத்தை கூட்ட அரசு தயார்

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 2019 ஆம் ஆண்டின் நிலுவைகளை செலுத்துவதற்கான கணக்கு வாக்கெடுப்பை நிறைவேற்றிக் கொள்ள எதிர்க்கட்சியினர் ஆதரவளிப்பதாக சபாநாயகரிடம் உறுதியளித்தால் மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவரத்தன நேற்று தெரிவித்தார்.

அரச நிதி முகாமைத்துவம் மற்றும் கடந்த கால சம்பிரதாயங்கள் தொடர்பில் போதிய அனுபவமும், அறிவும் இல்லாமையின் காரணமாகவே எதிர்க்கட்சித் தலைவர் கணக்கு வாக்கெடுப்புக்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகிறார். எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்க இருந்திருந்தால் நாட்டின் நெருக்கடியான நிலைமையை கருத்தில்கொண்டு இதற்கு ஆதரவளித்திருப்பார் என்றும் அமைச்சர் பந்துல கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த சில நாட்களாக எமக்கு வீடுகளில் நிம்மதியாக உறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நிலுவைகள் செலுத்தப்படாத ஒப்பந்ததாரர்கள் தினம் தினம் வீடுகளுக்கு வந்து நிலுவை நிதியை கேட்கின்றனர். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே இந்நிலுவை வைக்கப்பட்டுள்ளது.

அதனை வழங்க நாம் நடவடிக்கைகள் எடுக்கின்ற போதிலும் எதிர்க்கட்சித் தலைவர் ஒத்துழைக்கவில்லையென அவர்களுக்கு பதிலளித்ததுடன், நிலுவையை வழங்குவதற்காக அனுமதியை அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டுக்குச் சென்று கோரிக்கை விடுமாறும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினேன்.

2019 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட கம்பெரலிய, அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை, எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா, பாதை அபிவிருத்தி உட்பட பல்வேறு வேலைத்திட்டங்களுக்கான ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைப் பணம் செலுத்தப்படாதுள்ளது.

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் இவர்களுக்கான நிலுவை பணத்தை செலுத்தும் முகமாகவே 360 பில்லியன் பெறுமதியான கணக்கு வாக்கு வாக்கெடுப்பொன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கையெடுத்தது. என்றாலும், எதிர்க்கட்சித் தலைவர் இதற்கு அனுமதி வழங்க முடியாதென கூறி எதிர்ப்பை வெளியிட்டமையால் கணக்கறிக்கையை நிறைவேற்றிக் கொள்ள முடியாது போனது.

இலங்கை சுதந்திரமடைந்தது முதல் இவ்வாறு ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டிருந்த சந்தர்ப்பங்களில் கணக்கறிக்கைகள் நிறைவேற்றப்பட்டு கடன் எல்லை அதிகரித்து திறைசேரியின் நிதிச் சபை ஊடாக பிணைமுறிகள் விநியோகிக்கப்பட்டு நடவடிக்கையெடுக்கப்படும். 

இது அரச நிதி முகாமைத்துவம் தொடர்பில் சாதாரண அறிவுள்ளவர்களுக்கும் தெரியும். அரச நிதி முகாமைத்துவம் தொடர்பில் போதிய அறிவும் அனுபவமும் இல்லாமையின் காரணமாகவே எதிர்க்கட்சித் தலைவர் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் அரச வருமானம் 2,380 பில்லியன்களாகும். ஆனால், அரச செலவானது 4,550 பில்லியன்களாகும்.

அரைவாசிக்கும் அதிகமான தொகை பற்றாக்குறையாகிறது. பற்றாக்குறையானது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன்கள் ஊடாகவே நிரப்பப்படுகிறது. அரசாங்கத்தை கொண்டுசெல்ல ஒரு நாளைக்கு 12.5 பில்லியன்கள் செலவாகிறது.

மாதமொன்றுக்கு சுமார் 379 பில்லியன்கள் அவசியமாகும். இதில்தான் சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி உட்பட ஏனைய கொடுப்பனவுகள் செலுத்தப்படுகின்றன. ஆகவே, வருமானம் இல்லாவிட்டால் கடன் எல்லையை அதிகரித்துதான் இதற்கு தீர்வுகாண முடியும். இதனைத்தான் ஒவ்வொரு அரசாங்கமும் செய்துள்ளன.

அரசியலமைப்பின் 144 ஆவது சரத்தின் பிரகாரம் அரச நிதி அதிகாரமானது பாராளுமன்றத்திற்கு உரித்துடையதாகும்.

அதனடிப்படையிலேயே கணக்கு வாக்கறிக்கைக்கு பாராளுமன்றத்தின் அனுமதியை கோரியுள்ளோம். பாராளுமன்றம் கலைக்கப்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் மூன்று மாதங்களுக்கு ஜனாதிபதிக்கு நிதி அதிகாரம் கிடைக்கும். 

தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் இந்த நிலுவையை செலுத்தும் நோக்கிலேயே நாம் இதற்கான அனுமதியை கோரியுள்ளோம். அனுமதியளிக்காவிட்டால் புதிய வரவு செலவுத் திட்டத்தில் நிலுவைகளை செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்.

நிலுவை செலுத்த எதிர்க்கட்சி ஆதரவளிக்காவிடின் தேர்தலில் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டாமென ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். காரணம் அதிகளவான ஒப்பந்ததாரர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களாகும்.

சபாநாயகரிடம் கணக்கு வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க தயாரென எதிர்க்கட்சியினர் உத்தரவாதமளித்தால் பாராளுமன்றத்தை மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் கூட்டி இதனை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் தயாராகவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட தலைவர்கள் சபாநாயகரிடம் இதனை எடுத்துரைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment