ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் ஆசிரியர் நிர்வாக சேவையில் பணியமர்த்தல் மற்றும் இடமாற்றம் தொடர்பில் சிறந்த முறைமையை தயாரிப்பதாக பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு பிரதமரின் தலைமையில் அண்மையில் (06) பாராளுமன்றத்தில் கூடியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் ஆசிரியர் நிர்வாக சேவையில் பணியமர்த்தல் மற்றும் இடமாற்றம் தொடர்பில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
விசேடமாக, வட மத்திய மாகாணத்திற்கு அண்மையில் நியமிக்கப்பட்ட 6 அதிகாரிகளில் 5 பேர் மீண்டும் இடமாற்றம் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
அதற்கமைய, இது தொடர்பாக குழுவில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட பணியமர்த்தலை மேற்கொள்ளும்போது அதிகாரிகள் பற்றிய மனிதாபிமான விடயங்களும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும் என இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், அதிகாரிகளை பணியமர்த்தும் போது சேவையின் தேவை குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் ஆசிரியர் நிர்வாக சேவையில் பணியமர்த்தல் மற்றும் இடமாற்றம் தொடர்பில் இதுவரை முறையான திட்டமொன்றோ பொறிமுறையொன்றோ இல்லை என்றும் தற்பொழுது அது தொடர்பில் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அத்துடன், ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் ஆசிரியர் நிர்வாக சேவையில் பணியமர்த்தல் மற்றும் இடமாற்றம் தொடர்பில் மனிதாபிமான விடயங்களையும் கருத்திற்கொண்டு மிகவும் சிறந்த முறைமை ஒன்றை தயாரிப்பதாக கௌரவ பிரதமர் மேலும் தெரிவித்தார்.
அதற்கு மேலதிகமாக, அங்கவீனமுற்ற மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கும் நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.
அத்துடன், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட 6 உப குழுக்களின் முன்னேற்றம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட உப குழுக்களின் தலைவர்கள் இதன்போது விடயங்களை முன்வைத்தனர்.
இந்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment