அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை கம்போடியா பிரதமர் பரிந்துரைத்துள்ளார்.
ஏற்கனவே, பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் அவரை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நோர்வே நோபல் குழுவிற்கு கம்போடிய பிரதமர் ஹன் மானெட் எழுதிய கடித்தில், “உலக அமைதியை நிலைநாட்டுவதில் ட்ரம்ப்பின் வரலாற்றுப் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்.
ட்ரம்ப் தொலைநோக்கு மற்றும் புதுமையான ராஜதந்திரம் மூலம் பல நாடுகள் இடையே ஏற்பட்ட மோதல்களுக்கு தீர்வு கண்டதுடன், பேரழிவு தரும் போர்களைத் தடுத்துள்ளார்.
ட்ரம்ப்பின் அசாதாரண அரசியல் திறமை, கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் அவர் வகித்த சிறப்பான பங்கின் மூலம் மிக சமீபத்தில் நிரூபிக்கப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார்
கம்போடியா, தாய்லாந்து இடையே கடந்த ஜூலை 24 அன்று எல்லைப் பிரச்சினை காரணமாக மோதல் வெடித்தது. இந்த மோதல்களால் இரு தரப்பிலும் 43 பேர் உயிரிழந்தனர், சுமார் 3,00,000 இற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர்.
இரு நாடுகளுடனான ட்ரம்பின் தொலைபேசி பேச்சுவார்த்தைக்குப் பின்னர், தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் (ASEAN) தலைவர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் சீன பேச்சுவார்த்தையாளர்கள் குழு ஆகியோரின் மத்தியஸ்த பேச்சு மூலமாக ஜூலை மாதம் 28 ஆம் திகதி போர் நிறுத்தம் உருவானது.
இந்தியாவுடனான மோதலை நிறுத்த உதவியதற்காக ட்ரம்ப்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் கடந்த ஜூன் மாதம் கூறியது.
ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த மாதம் ட்ரம்ப்பை நோபல் விருதுக்கு பரிந்துரைத்ததாகக் கூறினார்.
No comments:
Post a Comment