தோல்வியில் முடிந்த தமிழ் மக்களது போராட்டத்திலிருந்து மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை முன்னெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றதென, சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (15) நடத்திய ஊடக சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஊடகச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, கடையடைப்பு, ஹர்த்தாலுக்கு கயவர்கள் விடுத்துள்ள அழைப்பை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.
இன்றைய சூழலில் கடையடைப்பு மற்றும் ஹர்த்தாலுக்கான எந்த அவசியமும் இல்லை. இவை, காலத்துக்கு ஒவ்வாத விடயம். முல்லைத்தீவில் இளைஞன் உயிரிழந்த சம்பவத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைதாகியுள்ளனர்.
இந்நிலையில் எதற்கு கடையடைப்பும் ஹர்த்தாலும். இதனால் நாளாந்தம் உழைக்கும் மக்களின் வாழ்வும் பொருளாதாரமுமே பாதிக்கப்படும். ஏழை மக்களை பகடைக்காய்களாக்க முயற்சிக்கும் நரித்தன அரசியலுக்கு எதுவும் இடம்கொடுக்கக்கூடாது.
இந்த கடை அடைப்பு போராட்டத்துக்கு வர்த்தகர்களோ, போக்குவரத்து சார் சங்கங்களோ, பொது அமைப்புகளோ எதுவானாலும் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது.
அதிகரித்த இராணுவ பிரசன்னம் என்பது, தோல்வியுற்ற இனம் சந்திக்கும் இயல்பான விடயம்தான். இதற்காக, இன்னுமொரு எதிர்ப்பு அரசியலுக்கு மக்களை அழைப்பது மிகப்பெரிய தவறு.
அரசியலில் எத்தனையோ வழி முறைகள் உள்ள நிலையில், தொடர்ந்தும் எதிர்ப்பு அரசியலென்பது அறிவுபூர்வமானதல்ல.
மடு மாதாவின் நலன்கருதி போராட்டத்தை பின்நகர்த்திய குறித்த தரப்பினர், நல்லூர் திருவிழாவைக் கருத்திற் கொள்ளவில்லை. சிலரின் சுயநல அரசியலுக்காக மக்களின் வாழ்க்கையை சீரழிக்கும் செயற்பாடுகளை இனியும் அனுமதிக்க முடியாது.
No comments:
Post a Comment