பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வேலைநிறுத்தம் : சம்பள உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளதால் அவசியமற்றது - தபால்மா அதிபர் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, August 17, 2025

பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வேலைநிறுத்தம் : சம்பள உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளதால் அவசியமற்றது - தபால்மா அதிபர் அறிவிப்பு

அரசாங்கம் அறிவித்திருந்த சம்பள உயர்வு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், தபால் ஊழியர்கள் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கின்ற வேலை நிறுத்தம் நியாயமற்றதென தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.

கைவிரல் அடையாள பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சம்பள அதிகரிப்பு மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவு முதலான 19 கோரிக்கைகளை முன்வைத்தும் தபால் ஊழியர்கள் இன்று (17) பிற்பகல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுபற்றி மேலும் விளக்கிய அவர், தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி என்பன இத்தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளன. 

அரசாங்க சுற்றறிக்கை இல. 10|2025 இற்கு அமைய 2025 ஏப்ரல் 01ஆம் திகதியிலிருந்து அரசாங்கம் அறிவித்த புதிய சம்பள உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தச் சூழலில், இவ்வாறான நடவடிக்கைகள் ஆரோக்கியமாக அமையாது. இதனால், தபால் அதிகாரிகள் உள்ளிட்ட சகலரதும் விடுமுறைகளை இன்றிலிருந்து இரத்துச் செய்துள்ளோம். 

ஏனைய திணைக்களங்களை விட தபால் திணைக்களத்தில் மேலதிக நேர ஊதியத்துடன் 25 வீதம் முதல் 50 வீதம் வரை போனஸ் நேர ஊதியம் உள்ளடக்கப்பட்டு கணக்கிடப்படுகிறது. எந்தவொரு ஊழியருக்கும் இதனால் நஷ்டம் ஏற்படப்போவதில்லை. 

எனவே இவ்வாறான வேலைநிறுத்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. தபால் திணைக்களம் நாடு முழுவதும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால், இந்த வேலைநிறுத்தம் பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும்.

தற்போது தபால் திணைக்களச் செலவின் 90 வீதம் சம்பளங்களுக்கும் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனால், அரசாங்க வரைமுறைகளுக்கு அப்பாற்பட்டு, கணக்காய்வு அறிக்கைக்கு மாற்றமாக செயற்பட முடியாது.

வருமானத்தை விட வருடாந்தம் ரூ. 04 பில்லியன் செலவுகள் அதிகமாகவுள்ள இத்திணைக்களத்தை இலாபகரமானதாக்க முடியாவிட்டால், வருடாந்த செயற்பாட்டுக்கான நஷ்டம் ரூ. 12 பில்லியனுக்கும் அதிகமாகக் கூடிய அபாயம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆயினும் நாடு முழுவதும் 3,354 தபால் மற்றும் உப தபால் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கப் போவதில்லையென அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment