அரசாங்க ஒத்துழைப்பு, வெளிநாட்டு நிதி உதவிகளுடன் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் : தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்றார் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 10, 2025

அரசாங்க ஒத்துழைப்பு, வெளிநாட்டு நிதி உதவிகளுடன் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் : தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்றார் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

காத்தான்குடி, மண்முனைப்பற்று பிரதேசங்களில் நடைபெறவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில், காத்தான்குடி நகர சபை மண்டபத்தில் இன்று (10) இடம்பெற்றது.

காத்தான்குடி நகர சபை, மண்முனைப்பற்று பிரதேச சபை ஆளும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.

இதன்போது, வீதி அபிவிருத்திப் பணிகள், உள்ளூர் சுற்றுலாத்துறையை முன்னேற்றுதல், கல்வி மேம்பாடு, பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், இளைஞர்களுக்கான பயிற்சிகள் மற்றும் தொழில்வாய்ப்புகள், பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் தொழில்வாய்ப்புகளுக்கான பயிற்சிகள், பாரம்பரியமாக நடைபெற்று வந்த வேலைத்திட்டங்களை மீளமைத்தல், விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி, மீனவர்களின் பிரச்சினைகள், வர்த்தகர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டு, அவற்றிற்கான தீர்வுகள் எடுக்கப்பட்டது.

இவ்வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த, காத்தான்குடி நகர சபை, மண்முனைப்பற்று தவிசாளர் தலைமையில் விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டன.

இதன்போது உரையாற்றிய கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், நிபுணர்கள், ஆலோசகர்களின் கருத்துக்களை பெற்று, இதற்கான ஆலோசனைகளை தயாரிக்குமாறும், வெளிநாட்டு உதவிகளுடன் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இரு சபை தவிசாளர்களுக்கும் உத்தரவிட்டார்.

அதேபோன்று, அர்ப்பணிப்புடன் இரவு பகலாக இவ்வேலைத்திட்டங்களை செய்து, இப்பிரதேசங்களை கட்டியெழுப்புவதற்காக நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றுவதற்காக வரும் சவால்களை உடைத்தெறிந்து, சகல பிரச்சினைகளையும் எதிர்கொண்டு நமது பிரதேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.

அதேபோல், அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்பு, மாகாண நிர்வாகத்தின் ஒத்துழைப்பு, வெளிநாட்டு அரச உதவிகளுடன் இப்பணிகளை மேற்கொள்ளவிருக்கிறோம். ஆகவே யார் என்ன சொன்னாலும், அரசாங்கம் எமக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. அந்த வகையில், அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் நாம் எமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும், நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment