பலவந்த ஜனாஸா எரிப்பு விடயத்தில் பொறுப்புக் கூறுவதிலிருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நழுவி விட முடியாது என சுட்டிக்காட்டியுள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, இந்த அநியாயத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் பொறுப்பு கூற வேண்டும் என நாமல் ராஜபக்சவிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச மற்றும் அக்கட்சியின் ஹம்பந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டீ.வீ. சானக உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைமையகத்திற்கு நேற்றுமுன்தினம் சென்றிருந்தனர். இதன்போது, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களுடன் மேற்கொண்ட சந்திப்பின்போது இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய நேற்றுமுன்தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், உலமா சபையினரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டமைக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நன்றியை தெரிவித்ததுடன், இலங்கை முஸ்லிம்களுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம்கள் விடயத்தில் அக்கறையுடன் இருப்பதை வெளிப்படுத்தவும் உலமா சபையுடன் சந்திப்பதற்கான கோரிக்கை விடுத்த நோக்கத்தை தெளிவுபடுத்தினார்.
வருகை தந்திருந்த பிரமுகர்களை வரவேற்று உரையாற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் முதலில் சபையிலிருந்த நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பற்றிய அறிமுகத்தை வழங்கியதுடன் நாடளாவிய ரீதியிலான ஜம்இய்யாவின் செயற்பாடுகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.
மேலும், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் விடயத்தில் வித்தியாசமான போக்குகளை காணமுடிந்ததாகவும் இது விடயத்தில் ராஜபக்சாவினர் மெத்தனப்போக்குடன் செயற்பட்டதாகவும் தெரிவித்தார்.
இலங்கை மீது யுத்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு சர்வதேச அழுத்தங்கள் மேலோங்கியபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமைவாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கைக்கு ஆதரவு திரட்டுவதற்கு ஜெனீவா வரை சென்றதை ஞாபகமூட்டிய உலமா சபை செயலாளர், இதன் காரணமாக உலமா சபை மீது தொடர்ந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது என்றார்.
இவ்வாறு தேசத்திற்காக நாமும் முஸ்லிம் சமூகமும் ஒன்றுபட்டு செயற்பட்டபோதும், யுத்தத்திற்கு பின்னர் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டனர்.
கிறீஸ் மனிதன் விவகாரம், பள்ளிவாசல்கள் தாக்குதல்கள், அளுத்கம வன்முறைகள் மற்றும் முஸ்லிம் வெறுப்பு பிரசாரம் திட்டமிடப்பட்டு தங்களது ஆட்சியின்போது முன்னெடுக்கப்பட்டது. இதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இவ்விடயங்களின்போது, குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குவதில் தவறு விடப்பட்டது. இவ்வாறுதான் ராஜபக்ச அரசாங்கங்கள் செயற்பட்டன. இதனாலேயே, பொதுஜனபெரமுன மக்களால் நிராகரிக்கப்பட்டது. இவ்விடயங்கள் குறித்து மீள் பரிசீலனை செய்து தவறுகளை திருத்திக்கொண்டு முன்னோக்கி பயணிக்க வேண்டும் என உலமா சபை செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன், பலஸ்தீன விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நிலைப்பாட்டை பாராட்டிய உலமா சபை செயலாளர், ரமல்லாவில் வீதியொன்றிற்கு மஹிந்த ராஜபக்சவின் பெயர் சூட்டப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், தற்போது காஸாவில் இடம்பெற்று வரும் அநியாயங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கண்டுகொள்ளாதிருப்பதாகவும், பலஸ்தீன விவகாரத்தில் இன்று மௌனம் காப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தனது அரசியல் கொள்கைகள், கட்சி நிலைப்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி விளக்கியதுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இருந்த இணக்கம் மற்றும் அவர் ஆற்றிய சேவைகளையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மேற்கொள்ளும் சகவாழ்வுத் திட்டத்தினையும் சகவாழ்வு மையங்களையும் பாராட்டி, இன, மத, மொழி வேறுபாடுகள் இல்லாத சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், பலஸ்தீன விவகாரத்தில் மௌனம் காப்பது குறித்து உலமா சபை செயலாளர் எழுப்பிய கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை.
இந்நிலையில், அதனை அடுத்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி கருத்துகளை முன்வைத்தார்.
அவர், ஜம்இய்யா ஓர் அரசியல் சார்பற்ற நிறுவனம் எனவும் சகவாழ்வு, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி பிற மதஸ்தலங்களுக்கு எமது அமைப்பினர் பல கள விஜயங்களை மேற்கொண்டிருப்பதனை சுட்டிக்காட்டினார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது ஆட்சிக் காலத்தில் நாட்டிற்கு ஆற்றிய சேவைகளையும் இலங்கையில் நிலவிய கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததையும் நினைவு கூர்ந்தார்.
என்றாலும் பிற்பட்ட காலங்களில் ஆட்சிக்கு வந்தவர்களால் இந்த நாட்டு முஸ்லிம்கள் பல்வேறு விதமான அநீதிகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அவற்றில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் உத்தியோகபூர்வ வழிகாட்டல்களை புறக்கணித்து, ஜனாஸா எரிப்பு விடயத்தில் ஜம்இய்யா அரச தரப்புடன் பல சந்திப்புக்களை நடாத்தியும் முஸ்லிம்களது உள்ளங்கள் பாதிப்புறும் வகையில் கொவிட் ஜனாஸாக்களை எரித்தமை, ஹலால் சான்றிதழுக்கு தடை விதித்தமை, முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திருத்தம், முஸ்லிம்களுக்கெதிரான திட்டமிட்ட கலவரங்களை தடுக்காமை, இஸ்லாத்தை அவமதித்தவர்களை கண்டிக்காமல் உயர் பதவிகள் வழங்கி கௌரவித்தமை போன்ற விடயங்களை சுட்டிக் காட்டியதுடன் உரியவர்கள் உலக முஸ்லிம்களிடத்தில் இவற்றிற்காக மன்னிப்பு கோர முன் வரவேண்டும்.
இளம் பாராளுமன்ற உறுப்பினராகிய தாங்கள் இவற்றிலிருந்து தகுந்த பாடங்களை கற்று முஸ்லிம்களது உள்ளங்கள் சாந்தப்படும் வகையில் இன, மதம் பாராது அரசியலில் ஈடுபடவேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.
அத்தோடு இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் இல்லை, பிற மத கடவுள்களை விமர்சிப்பது கூடாது, அவரவருக்கு அவரவர் மார்க்கம் என்ற இஸ்லாமிய கோட்பாடுகளை அல்-குர்ஆன் ஆதாரங்களோடு சுட்டிக்காட்டிய ரிஸ்வி முப்தி ஜம்இய்யா அதற்காக மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.
இதற்கு பதிலளித்த பொதுஜன பெரமுன தரப்பினர், ஜனாஸா எரிப்பு அரசாங்கம் முன்னெடுத்த விடயம் அல்ல, அது கொவிட் செயலணியின் தீர்மானம் என குறிப்பிட்டனர். எனினும், இதற்கு பதிலளித்து பேசிய உலமா சபை செயலாளர் கோவிட் ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்ட விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சதான் முழுமையான பொறுப்பு. அவர் பதவியில் இருக்கும்போதே ஜனாஸா எரிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. செயலணி மீது விடயத்தை சுமத்தி தப்பித்துக்கொள்ள முடியாது. அவர்தான் இவ்விடயத்திற்கு முழுமையான பொறுப்பு கூற வேண்டிய நபராக உள்ளார். அவர் ஒருபோதும் பொறுப்பு கூறலில் இருந்து நழுவிவிட முடியாது. அத்துடன், ஆட்சியில் இருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இது விடயத்தில் முஸ்லிம்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களாக இருக்கின்றர் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, நிகழ்வின் இறுதியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு உள்ளிட்ட ஏனைய சில வெளியீடுகளும் கையளிக்கப்பட்டன.
இந்த சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை சார்பில் அதன் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், உப தலைவர்கள், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Vidivelli
No comments:
Post a Comment