பட்டம் பெற்று வெளிநாடுகளுக்குச் சென்ற மாணவர்களில் ஐம்பது வீதமானோர் மீண்டும் நாட்டுக்கு திரும்பவில்லை என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறும் மாணவர்களில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இவ்வாறு செல்வோரில் ஐம்பது வீதத்தினர் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதில்லை எனத் தெரிய வந்துள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அதுகோரல மற்றும் லக்ஷ்மன் குமார ஆகியோரால் நடத்தப்பட்ட தொடர்ச்சியான ஆய்விலேயே, இவ்விடயம் தெரிய வந்துள்ளது.
அநேகமாக விஞ்ஞானம் சார்ந்த பட்டப்படிப்புகளை பெற்று வௌிநாடு சென்றுள்ளோரே நாடு திரும்பாதுள்ளதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது அரச பல்கலைக்கழகங்களில் சுமார் 1,42,000 இளங்கலை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் 25 வீதமானோர் கலைப் பிரிவிலும், 20 வீதமானோர் முகாமைத்துவம் மற்றும் வணிகப் பிரிவிலும், 13 வீதமானோர் பொறியியல் பிரிவிலும் மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரிவுகளில் 10 வீதமானோரும், விவசாயம் மற்றும் கணினி விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளில் 11 வீதமானோரும் கல்வி கற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அண்மைக்காலங்களில், ஆண்டுதோறும் தேசிய பல்கலைக்கழகங்களுக்கு சுமார் 44,000 மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றனர்.
2023 ஆம் ஆண்டில், 33,306 பட்டதாரிகள் வௌியாகியிருந்தனர். பல்கலைக்கழக கல்விக்காக இவ்வாண்டில், அரசாங்கம் சுமார் 87 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. இதில் ரூ.69.9 பில்லியன் தொடர்ச்சியான செலவும் ரூ.16.7 பில்லியன் மூலதனச் செலவும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக அந்தந்த பல்கலைக்கழகங்கள் தங்கள் சொந்த வருவாய் நிதியையும் செலவிடுவதாகவும் பேராசிரியர் வசந்த அதுகோரல மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment