செனல் 04 தொலைக்காட்சி சேவையூடாக வெளியிடப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான திரைப்படத்தின் கதாநாயகனான அசாத் மௌலானாவை, நாட்டுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையிலேயே பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இவ்வாறான சூழ்நிலையில் எதிர்க்கட்சியினர் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை தொடர்பில் தாம், கவலையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், அசாத் மௌலானாவுடன் முழுமையான தொடர்புகளை ஏற்படுத்தி அவரை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்நிலையில் இந்த ஐந்து சதம் குழுவினர் பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கையளித்துள்ளனர்.
இந்த செயல் கவலையளிப்பதுடன் இவ்வளவு மட்டமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என நான், எதிர்க்கட்சியினரைக் கேட்டுக் கொள்கின்றேன். எனினும் இவ்வாறான மட்டமான எதிர்க்கட்சி தொடர்பில் நாம் கவலையடைகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மற்றும் அச்சம்பவத்தின் உண்மையான குற்றவாளிகளை பாதுகாப்பதற்கான தேவை எதிர்க்கட்சியினருக்கு உள்ளது. இதன் ஒரு அம்சமாகவே பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், எதிர்க்கட்சியினருக்கு தேவையான விதத்தில் அரசாங்கம் செயற்படப்போவதில்லை. அதேவேளை, உண்மையான விசாரணைகளை மூடி மறைப்பதற்கான எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகளில் நாம் சிக்கப்போவதுமில்லை.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முறையாக நடக்காதுள்ள நிலையில், சஜித் பிரேமதாசவுக்கோ அல்லது எதிர்க்கட்சியினருக்கோ எவரது பெயரையும் குறிப்பிட வேண்டிய அவசியம் இருக்கவில்லை.
ஆனால் எமது அரசாங்கம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மற்றும் அவர்களுக்கு உதவியவர்கள் அதன் மூலம் அரசியல் இலாபம் தேடியவர்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்கிறது. இதன்போதே அவசரமாக தற்போது பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருகின்றனர்.
குண்டுத் தாக்குதல் தொடர்பான தகவல்கள் கிடைத்திருந்த போதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறிய ஒரு தரப்பினர் உள்ளனர். அத்துடன் தாக்குதலுக்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரும் உள்ளனர். அது தொடர்பிலேயே குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது முறையான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
அதைவேளை ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற விசாரணைக் குழுவில் சஜித் பிரேமதாசவும் சில எம்பிக்களும் அங்கம் வகிக்கின்றனர். அப்போது குறிப்பிடப்படாத பெயர் இப்போதுதான் அவர்களுக்கு நினைவுக்கு வந்துள்ளது.
இப்போது அவர்கள் ஏன், அரசாங்கத்துடன் உள்ள ஒருவரை இதனுடன் தொடர்புபடுத்த வேண்டும் என்பது தெளிவாகிறது. இதற்குக் காரணம் மேற்படி குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மற்றும் அதன் உண்மையான குற்றவாளிகளை மறைப்பதற்கு எதிர்க்கட்சிக்கு உள்ள தேவையே, என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment