(எம்.மனோசித்ரா)
முதலீட்டு வலயங்களில் ஏற்றுமதிக்காக மாத்திரம் கஞ்சா உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடும் வரையறைகள் பாதுகாப்புக்கு மத்தியில் முதலீட்டு சபை மற்றும் ஆயர்வேத திணைக்களம் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், முதலீட்டு வலயங்களில் கஞ்சா உற்பத்திக்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரலில் அப்போதைய இராஜாங்க அமைச்சரது காலத்தில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கான விதிமுறைகளும் அப்போதைய கால கட்டத்திலேயே தயாரிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய முதலீட்டு சபையை தொடர்புபடுத்தி இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியும். எனினும் கடந்த காலங்களில் இதற்காக 7 முதலீட்டாளர்கள் முன்வந்த போதிலும், இதற்கான வழிமுறைகளில் காணப்பட்ட குறைபாடுகளால் காலதாமதம் ஏற்பட்டிருந்தது.
இதற்கு ஆயர்வேத திணைக்களத்திடமும் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். சுற்றுலா அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட மேலும் பல நிறுவனங்களிடம் இதேபோன்று அனுமதி பெற வேண்டியுள்ளது. கடும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கமையவே இதற்கான அனுமதி வழங்கப்படும். உற்பத்தியின் அனைத்து பங்குகளும் ஏற்றுமதிக்காகவே அனுமதிக்கப்படும்.
முதலீட்டு சபை மற்றும் ஆயர்வேத திணைக்களம் இணைந்து இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. முதலீட்டு வலயங்களில் மாத்திரமே இந்த உற்பத்திகள் இடம்பெறும். அவ்வாறு செய்தால் மாத்திரமே முதலீட்டாளர்களுக்கு நிவாரணத்தையும் வரையறைகளையும் வழங்க முடியும். இது கடும் கட்டுப்பாடுகளுக்குள் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டமாகும் என்றார்.
No comments:
Post a Comment