(இராஜதுரை ஹஷான்)
பிரதமர் பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. அதற்கான அவசியமும் தோற்றம் பெறவில்லை. அரசியலில் தோல்வியடைந்துள்ளவர்கள் அரசாங்கத்துக்குள் முரண்பாடு என்று போலி நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆளும் தரப்பின் சகல உறுப்பினர்களும் கூட்டுப் பொறுப்புடன் செயற்படுகின்றனர் என்று தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, தேசிய மக்கள் சக்திக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் முரண்பாடு, பிரதமர் பதவியில் மாற்றம் என்று அரசியலில் தோல்வியடைந்துள்ள உதய கம்மன்பிலதான் குறிப்பிட்டுக் கொள்கிறார்.
உதய கம்மன்பில தற்போது எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பக்கம் உள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் குடிகொண்டுள்ளார். இவர் கடந்த காலங்களில் கோட்டபய ராஜபக்ஷவுடன் ஒன்றிணைந்து செயற்பட்டார். அந்த அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகும் தருணத்தில் சூட்சமமான முறையில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்பட்டார். பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்பட்டார். தற்போது எதிர்க்கட்சித் தலைவருடன் ஒன்றிணைந்துள்ளார்.
உதய கம்மன்பில போன்றவர்களை இணைத்துக் கொள்ளும்போது எதிர்க்கட்சித் தலைவர் அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சியை உருவாக்குவதற்கு அக்கட்சியின் பலர் ஆரம்பத்தில் இருந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள். ஆகவே அவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக் கொள்கிறோம்.
அரசியலில் தோல்வியடைந்துள்ள உதய கம்மன்பிலதான் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிட்டுக் கொள்கிறார். பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படப்போகிறது என்று குறிப்பிட்டுக் கொள்கிறார்.
பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான எவ்வித அவசியமும் கிடையாது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கட்சியின் சகல உறுப்பினர்களுடன் இணக்கமாகவே செயற்படுகிறார். பிரதமர் பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்பதை மக்களுக்கு உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறோம்.
அரசியலில் தோல்வியடைந்து தமது அரசியல் கொள்கை என்னவென்பதை கேள்விக்குள்ளாக்கியுள்ளவர்கள் குறிப்பிடும் குற்றச்சாட்டுக்களுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது என்றார்.
No comments:
Post a Comment