(எம்.மனோசித்ரா)
தபால் தொழிற்சங்கள் முன்வைத்துள்ள 19 கோரிக்கைகளில் பல ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளவையாகும். கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது அவற்றில் சிலவற்றுக்கு தபால் தொழிற்சங்கங்கள் இணக்கமும் தெரிவித்துள்ளன. அவ்வாறு இணக்கம் தெரிவித்த பின்னர் இவ்வாறு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது நியாயமற்றது என தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. ருவன் சத்குமார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தபால் தொழிற்சங்கள் முன்வைத்துள்ள 19 கோரிக்கைகளில் பல ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளவையாகும். தபால் ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாக அலுவலகங்களில் வருகை மற்றும் பணி நிறைவு செய்து செல்லும்போது கைரேகைப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளமை, மேலதிக வேலை நேர கொடுப்பனவு மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவு வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுகின்றமை உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்தே இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகவே இந்த வேலை நிறுத்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நாம் அனைவரும் அரச உத்தியோகத்தர்கள் என்பதால் அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆட்சேர்ப்பு தொடர்பான கோரிக்கையும் இவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு 600 தபால் அதிகாரிகளை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய போட்டிப் பரீட்சைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டு சம்பளம் மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ள வீதத்தை அடிப்படையாகக் கொண்டு அவதானித்தால் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டம் நியாயமற்றதாகும்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதற்கமைய குறிப்பிட்ட வழிமுறையொன்றுக்கு இணக்கம் காணப்பட்டு அவர்களால் கையெழுத்திடப்பட்ட கடிதமொன்றும் எம்மிடமுள்ளது. அதற்கமைய கைரேகை பதிவிற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். அவ்வாறிருக்கையில் தற்போதும் அதற்கும் எதிர்ப்பினை வெளியிட்டு வேலை நிறுத்தங்களில் ஈடுபடுவது நியாயமற்றது என்றார்.
No comments:
Post a Comment