தமிழ், முஸ்லிம், சிங்களம் என இனப் பிரச்சினையை திணிக்க வேண்டாம் : வடக்கு, கிழக்கு தலைவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ள அமைச்சர் நளிந்த - News View

About Us

About Us

Breaking

Sunday, August 17, 2025

தமிழ், முஸ்லிம், சிங்களம் என இனப் பிரச்சினையை திணிக்க வேண்டாம் : வடக்கு, கிழக்கு தலைவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ள அமைச்சர் நளிந்த

(எம்.மனோசித்ரா)

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் இளைஞரது மரணத்துக்கும், மக்களின் காணிகள் அபகறிக்கப்படுவதாகக் கூறப்படுவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்த சம்பவத்துக்குள் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என இனப் பிரச்சினையை திணிக்க வேண்டாம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ் அரசியல் தலைவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த சம்பவத்துக்குள் தமிழ் மக்களின் காணிகள் அபகறிக்கப்படுவதாக கூறப்படுவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இராணுவ முகாம் இடமாற்றம் செய்யப்படுகிறது. இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் அந்த இடத்தை அரசாங்கத்தின் வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தவோ அல்லது அந்த நபர்களுக்கு வழங்கவோ முடியும். எனவே இதனை காணி விவகாரத்துடன் தொடர்புபடுத்த வேண்டியதில்லை.

அது மாத்திரமின்றி இந்த சம்பவத்துக்குள் தமிழ், முஸ்லிம், சிங்களம் என பிரச்சினையை திணிக்க வேண்டாம்.

இராணுவ முகாமுக்குள் எவரேனும் அத்துமீறி பிரவேசிக்க முற்பட்டால் அவர்களை வெளியேற்ற இராணுவத்தினர் நடவடிக்கை எடுப்பர். அதனையே இந்த சம்பவத்தின்போது இராணுவத்தினர் மேற்கொண்டிருக்கின்றனர்.

இதன்போது ஏதேனும் சட்ட மீறல்கள் இடம்பெற்றிருக்கின்றனவா என்பது தொடர்பிலேயே தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சம்பவத்துடன் இராணுவத்தினர் தொடர்புபட்டிருக்கின்றனர் என்பதற்காக நாம் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு நியாயத்தை வழங்கத் தவறவில்லை.

நாட்டில் சகல பகுதிகளிலும் உள்ள மக்களும் எமக்கு ஆதரவளித்திருக்கின்றனர். எனவே எவ்வித பேதமும் இன்றி சகல மக்களதும் உரிமையையும் நாம் பாதுகாப்போம்.

எனவே நீண்ட காலமாக தீர்க்கப்படாமலுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு வடக்கு, கிழக்கு அரசியல் தலைவர்கள் முயற்சிக்க வேண்டுமே தவிர அரசாங்கத்துக்கு எதிராக மக்களை தூண்டிவிடுவதற்கு முயற்சிக்க கூடாது.

வரலாற்றை நிகழ்காலத்துடன் தொடர்புபடுத்தி மக்களை அச்சப்படுத்த வேண்டாம் என்றும் அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment