பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜயசேகர (ஓய்வு) உடனடியாக அப்பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நீக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு நாங்கள் தயாராகி வருகின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடைபெற்ற தருணத்தில் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக இருந்தவர் மேஜர் ஜெனரல் அருணா ஜயசேகர (ஓய்வு) தற்போது அவர் பாதுகாப்பு பிரதி அமைச்சராக பதவி வகித்துக் கொண்டிருக்கின்றார். உண்மையில் இதுவொரு முரண்பாடான விடயமாகும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன்னிறுத்துவதாக வாக்குறுதி அளித்தார்கள்.
தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பந்தமான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறினாலும் அதுபற்றிய தகவல்களை வெளியிடுவதற்கு தயாராக இல்லை.
அவ்வாறான நிலையில் தாக்குதல்கள் நடத்தப்படும்போது கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக இருக்கும் ஒருவர் பிரதி பாதுகாப்பு அமைச்சராக பதவியில் இருக்கும்போது எவ்வாறு நீதியான சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்பது எமது கேள்வியாகவுள்ளது.
ஆகவே, உடனடியாக மேஜர் ஜெனரல் அருணா ஜயசேகர (ஓய்வு) தனது பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும். இல்லையென்றால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நியாயமாகவும், சுயாதீனமாகவும் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யும்பொருட்டு அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
அவ்வாறில்லாது அவர் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பாராக இருந்தால் அவருக்கு எதிராக நாம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவோம். இதற்கு பொது எதிரணியின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வோம் என்றார்.
No comments:
Post a Comment