(எம்.மனோசித்ரா)
வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளை மூடி அவற்றை இந்தியாவில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடுகின்றன. அவ்வாறு இடம்பெற்றால் எதிர்காலத்தில் இலங்கையில் ஆடைத் தொழிற்சாலை முற்றாக வீழ்ச்சியடையும். வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் அரசாங்கத்தின் இயலாமையையே இவை வெளிப்படுத்துவதாக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மிகக் குறுகிய காலத்துக்குள் இந்த அரசாங்கம் மக்களின் அதிருப்திக்குள்ளாகியுள்ளது. இதற்கு முன்னர் எந்தவொரு அரசாங்கமும் குறுகிய காலத்துக்குள் தேர்தலொன்றை எதிர்கொண்டு, அதில் இந்தளவுக்கு பின்னடைவை எதிர்கொண்டதுமில்லை. அரசாங்கத்தின் இயலாமை தற்போது வெளிப்பட்டுள்ளது.
தமது இயலாமையை மறைப்பதற்காக தொடர்ச்சியாக பொய்களைக்கூறி வருகின்றனர். அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் கூட்டு அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார். ஆனால் இதுவரையில் எந்தவொரு கூட்டு அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
மறுபுறம் இந்தியாவுடன் இரகசிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பான எவ்வித தகவலும் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படவில்லை.
சுதந்திர வர்த்தக வலயத்தில் நெக்ஸ் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. இந்தியா, பிரித்தானியாவுடன் அண்மையில் செய்து கொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் 99 சதவீத வரி குறைக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை இந்தியாவில் முன்னெடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளன. இலங்கையில் எதிர்காலத்தில் ஆடைத் தொழிற்சாலைகள் முற்றாக வீழ்ச்சியடையும் என்பதற்கான முன்னெச்சரிக்கையாகவே இந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. அவ்வாறு இடம்பெற்றால் ஆயிரக்கணக்கானோர் தொழிலை இழக்க நேரிடும். அரசாங்கம் அதற்கு தயாராகிறதா?
வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் எந்தவொரு அமைச்சரும் எந்தவொரு நாட்டுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில்லை. அவ்வாறிருக்கையில் எவ்வாறு வெளிநாட்டு முதலீடுகளைப் பாதுகாக்க முடியும்? நாட்டு மக்களின் எதிர்காலம் அச்சுறுத்தல் மிக்க நிலைமையிலேயே காணப்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment