மின்சார கட்டணத்தை அரசாங்கம் எந்தளவு அதிகரிக்க தீர்மானித்திருக்கிறது? : அதே இணக்கப்பாட்டை பின்தொடர்வதால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் - சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Friday, May 9, 2025

மின்சார கட்டணத்தை அரசாங்கம் எந்தளவு அதிகரிக்க தீர்மானித்திருக்கிறது? : அதே இணக்கப்பாட்டை பின்தொடர்வதால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் - சஜித் பிரேமதாச

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கமைய மின்சார கட்டணத்தை அரசாங்கம் எந்தளவு அதிகரிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது என்பதை வெளிப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) நிலையியற் கட்டளை 27 இன் 2 கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கையெழுத்திட்ட சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டை மாற்றியமைத்து, தாம் ஆட்சிக்கு வந்த பிறகு புதிய சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை எட்டுவோம் என தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.

இருந்தபோதிலும், ஆட்சிக்கு வந்த பிறகு அந்த தேர்தல் வாக்குறுதியை மீறி, முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கையெழுத்திட்ட அதே சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டை பின்தொடர்வதால் நமது நாட்டு மக்கள் தற்போது பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டுக்கமைய அரசாங்கம் தற்போது மின்சார கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. மின்சார உற்பத்தி செலவை அடிப்படையாகக் கொண்டு மின் கட்டணம் திருத்தப்பட வேண்டும் என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையாகும். அந்நிலைப்பாட்டில் இருந்தா அரசாங்கம் மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்போகிறது என கேட்கிறேன்.

இந்நிலையில் மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அளவும் சர்வதேச நாணய நிதியத்தின் மின் உற்பத்தி செலவை அடிப்படையாகக் கொண்ட செலவுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் இருக்கிறது. ஆனால் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் மின் உற்பத்தி செலவு தொகையையே ஏற்றுக் கொண்டுள்ளது.

அவ்வாறு மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் அதனால் மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்பு தொடர்பில் அரசாங்கம் மதிப்பீடொன்றை மேற்கொண்டுள்ளதா? பூச்சியம் மின் அலகில் இருந்து 90 அலகு வரை எந்தளவு மின் கட்டணம் அதிகரிக்கப்போகிறது?

அதேபோன்று டிஜிட்டல் ஏற்றுமதி சேவைக்கு நூற்றுக்கு 30 வீதம் வரி அறவிட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாகவும் அரசாங்கம் நூற்றுக்கு 15 வீதம் அறவிடப்போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. டிஜிட்டல் ஏற்றுமதி சேவைக்கு வரி அறவிட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையா என கேட்கிறேன்.

மின்சாரக் கட்டணத்தை 33 வீதமாக குறைப்பதாகக் கூறிய தற்போதைய அரசாங்கம், நிபந்தனைகளுக்கு உட்பட்டு மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கத் தயாராகி வருகிறது.

சிரேஷ்ட பிரஜைகளினதும், சிறுவர்களினதும் சேமிப்பு கணக்குகளுக்கான 15 வீத வட்டி வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த வட்டி வீகிதம் வழங்கப்படுவதில்லை. இவ்வாறு வழங்கப்படாமல் இருப்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையா என கேட்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment