உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு : யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, திருகோணமலை மாவட்ட நிலவரங்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, May 5, 2025

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு : யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, திருகோணமலை மாவட்ட நிலவரங்கள்

நாளையதினம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்லப்பட்டது.

நாளையதினம் நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பூர்த்தியாகியுள்ள நிலையில் இன்று (05) காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் முறையில் எடுத்துச் செல்லப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, மூன்று நகர சபை, 13 பிரதேச சபை என 17 உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. 17 உள்ளூராட்சி சபைகளுக்காக 243 வட்டாரங்களில் தேர்தல்கள் நடைபெறவுள்ளது.

517 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் சார்பில் 3, 519 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 இலட்சத்து 98 ,140 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு இன்று (05) காலை எடுத்துச் செல்லப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் இன்று (05) தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் பிரதான மத்திய நிலையமாகிய மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இருந்து வாக்கெடுப்பு நிலையங்களுக்கு சிரேஸ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களினால் எடுத்துச் செல்லப்பட்டன.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நாளை இடம்பெறவிருக்கின்ற நிலையில் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 447 வாக்கெடுப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகளே எடுத்துச் இவ்வாறு செல்லப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு 455,520 பேர் தகுதி பெற்றுள்ளதுடன், வாக்களிப்பதற்காக 447 வாக்களிப்பு நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேர காலத்துக்குச் சென்று பொதுமக்கள் வாக்களிக்க வேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று (05) அனுப்பி வைக்கப்பட்டன.

நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வவுனியா மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 154 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுக்கள் மற்றும் ஏனைய தேவையான ஆவணங்கள் வவுனியா மாவட்டச் செயலகத்தில் இருந்து காலை முதல் அனுப்பி வைக்கப்பட்டது.

பொலிஸாரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை உள்ளூராட்சி மன்ற தேர்தல் நாளை (06) நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள நிலையில், வாக்குப் பெட்டிகள் இன்றையதினம் (05) திருகோணமலை வாக்களிப்பு மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த மாவட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கான 321 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று காலை 8.00 மணியளவில் திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் ஆரம்பமானது.

321 வாக்களிப்பு நிலையங்களில் இருந்து 129 வாக்குகளை எண்ணும் நிலையங்கள் தெரிவு செய்து அந்த வட்டாரத்தில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், ”தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அதற்காக 1700 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

மேலும், தேர்தல் பணிக்காக 3820 அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த மாவட்டத்தில் உள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து 136 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 319,399 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்றும், மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 14337 அரச ஊழியர்கள் விண்ணப்பித்திருப்பதாகவும்;; மேலும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment