புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து வருகின்ற ஹாஜிகளை வரவேற்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜித்தாவிலுள்ள இலங்கையின் கொன்சியூலேட் ஜெனரல் அலுவலகம் தெரிவித்தது.
கடந்த 29ஆம் திகதியிலிருந்து ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக உலகளாவிய ரீதியிலிருந்து ஹாஜிகள் சவூதி அரேபியா செல்கின்றனர். இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் குழு எதிர்வரும் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை செல்லவுள்ளது.
46 ஹாஜிகளைக் கொண்ட இந்த முதல் குழு 11ஆம் திகதி இலங்கை நேரப்படி அதிகாலை 5.15 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படவுள்ளது.
இந்த குழுவினரை வழியனுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரச ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ளன.
இதேவேளை, இந்த குழு 11ஆம் திகதி சவூதி நேரப்படி பி.ப 3.50 மணிக்கு ஜித்தாவிலுள்ள மன்னர் அப்துல் அஸீஸ் விமான நிலையத்தினை சென்றடையவுள்ளது.
இவர்களை வரவேற்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஜித்தாவிலுள்ள இலங்கையின் கொன்சியூலேட் ஜெனரல் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வில் சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வதும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, இலங்கையிலிருந்து வருகின்ற அனைத்து ஹாஜிகளும் சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சின் கீழுள்ள நுஸுக் எனும் இணையத்தளத்தில் தங்களின் தகவல்களை பிரதான இயக்குனர்கள் ஊடாக பதிவேற்றம் செய்யுமாறு ஜித்தாவிலுள்ள இலங்கையின் கொன்சியூலேட் ஜெனரல் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த இணையத்தளத்தின் ஊடாகவே ஹாஜிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஹாஜிகளுக்கு சேவை வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள சேவை நிறுவனத்தினால் போக்குவரத்து ஏற்பாடுகள், ஜித்தா, மக்கா, மினா, அரபா மற்றும் மதீனாவில் போன்ற இடங்களில் தேவையான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொன்சியூலேட் ஜெனரல் அலுவலகம் தெரிவித்தது.
இதேவேளை, ஹாஜிகள் செல்லுபடியாகும் ஹஜ் விசாவுடனேயே சவூதி அரேபியாவிற்குள் நுழைய முடியும் எனத் தெரிவித்த கொன்சியூலேட் ஜெனரல் அலுவலகம், ஹஜ் விசா தவிர்ந்த வேறு எந்த விசாவினை வைத்திருப்பவர்களும் இந்த வருடம் ஹஜ் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவித்தது.
அத்துடன் ஹஜ் பயண ஏற்பாடுகள் தொடர்பில் முகவர் நிறுவனங்களுடன் கலந்துரையாடி தகவல்களை பெற்றுக் கொள்வதுடன், சவூதி அரேபியா வந்தடைய முன்னர் ஹஜ் கடமைகள் தொடர்பான விடயங்களை அறிந்துகொள்ளுமாறும் கொன்சியூலேட் ஜெனரல் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு மேலதிகமாக ஹஜ்ஜுக்குச் செல்ல 10 நாட்களுக்கு முன்னர் மூளைக்காய்ச்சல் மெனிஞ்ஜைடிஸ் தடுப்பூசியை ஏற்றியமைக்கான சான்றிதழையும் கொவிட்-19 தடுப்பூசி சான்றிதழையும் வைத்துக் கொள்ளுமாறும் கொன்சியூலேட் ஜெனரல் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
ஹஜ் கடமைக்கு தேவையான பொருட்களை மாத்திரம் கொண்டுவருவதுடன் சவூதி அரேபியாவினால் தடை செய்யப்பட்ட மற்றும் தடுக்கப்பட்ட பொருட்களை கொண்டுவருவதை தவிர்க்குமாறும் கொன்சியூலேட் ஜெனரல் அலுவலகம் கோரிக்கை விடுத்தது.
இலங்கையிலிருந்து வருகின்ற ஹாஜிகளுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களை தவிர்க்கும் வகையிலேயே மேற்படி அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Vidivelli
No comments:
Post a Comment