நீண்ட தூர சேவை பஸ்கள் விசேட சோதனை - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 14, 2025

நீண்ட தூர சேவை பஸ்கள் விசேட சோதனை

நீண்ட தூர பயணிகள் போக்குவரத்து சேவை பஸ்களை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூர சேவை பயணிகள் பஸ்கள் விபத்துக்குள்ளாவது நாளாந்தம் அதிகரித்து வருவது அவதானிக்கப்பட்டு வருவதை அடுத்து, இவ்வாறு விசேட சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இரவு நேர தூர சேவை பயணிகள் பஸ்களை விசேட பரிசோதனைக்கு உட்படுத்தி, மது அருந்திவிட்டு வாகனம் செலுத்துதல், போதைப் பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்துதல், கவனயீனமாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் செலுத்துதல் போன்ற போக்குவரத்து குற்றங்கள் தொடர்பாக சட்டத்தை அமுல்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள அறிவுறுத்தலில் குறிப்பிட்ள்ளார்.

அதற்கமைய, அந்தந்த பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட, தெரிவு செய்யப்பட்ட, பொருத்தமான இடங்களில் இரவு நேரங்களில் பொலிஸ் அதிகாரிகள் குழுவினரை ஈடுபடுத்தி, வீதியில் செல்லும் வாகனங்கள் மற்றும் பஸ்களை விசேட பரிசோதனைக்கு உட்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸ் மோட்டார் சைக்கிள் ரோந்து பிரிவு அதிகாரிகள் மூலம், கவனயீனமாக வாகனம் செலுத்தும் பஸ்களை பரிசோதனைக்கு உட்படுத்தி சட்டத்தை அமுல்படுத்தவும் பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment