மீண்டுமொரு தோல்வியடைந்த அரசாங்கத்தை எதிர்கொள்ள இலங்கைக்கு திராணியில்லை : நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சகலரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம் என்கிறார் அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 7, 2025

மீண்டுமொரு தோல்வியடைந்த அரசாங்கத்தை எதிர்கொள்ள இலங்கைக்கு திராணியில்லை : நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சகலரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம் என்கிறார் அலி சப்ரி

(நா.தனுஜா)

'ஊடகக் கண்காட்சியை' நடாத்துவதன் ஊடாக எப்போதும் நாட்டை ஆழ முடியும் என கருதியிருந்தால், அது முற்றிலும் தவறானதாகும். இலங்கையின் கடந்த கால அரசாங்கங்கள் அடுத்தடுத்து தோல்வி கண்டிருக்கும் நிலையில், மீண்டுமொரு தோல்வியடைந்த அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு இலங்கைக்குத் திராணியில்லை. எனவே தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்பட வேண்டுமாயின், அவர்கள் பேசுவதைக் குறைத்து, அதனை செயலில் காண்பிக்க வேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி தெற்கில் வெற்றி பெற்றிருந்தாலும், பல சபைகளில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மையைப் பெறத்தவறியிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அலி சப்ரி, அப்பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

'ஊடகக் கண்காட்சியை' நடாத்துவதன் ஊடாக எப்போதும் நாட்டை ஆழ முடியும் என நீங்கள் கருதியிருந்தால், அது முற்றிலும் தவறானதாகும். நீங்கள் கூறும் விடயங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதன் ஊடாக வீதிகளில் இருக்கும் மக்களால் உணரக்கூடிய மாற்றத்தை உருவாக்குங்கள். சாதாரண மக்கள் மெச்சக்கூடிய வகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு, செயற்திறன்மிக்க பொது நிர்வாகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பவற்றை நிலைநிறுத்துங்கள்.

காலவோட்டத்தில் மக்கள் கடந்த காலத்தைப் பற்றிய பேச்சுக்களில் ஆர்வம் இழப்பார்கள். அவர்கள் கடந்த கால அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மகிழ்ச்சியடையவில்லை என்பதனாலேயே தற்போதைய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அன்றேல் இதுவும் வெறுமனே 'நல்லாட்சி அரசாங்கம் - 2' ஆக மாறிவிடும்.

இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கையாகும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ 18 மாதங்களில் பதவியை இராஜினாமா செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இலங்கையின் கடந்த கால அரசாங்கங்கள் அடுத்தடுத்து தோல்வி கண்டிருக்கும் நிலையில், மீண்டுமொரு தோல்வியடைந்த அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு இலங்கைக்குத் திராணியில்லை. எனவே தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்பட வேண்டுமாயின், அவர்கள் பேசுவதைக் குறைத்து, அதனை செயலில் காண்பிக்க வேண்டும்.

நாமனைவரும் தேர்தல்களில் அரசியல் செய்வோம். இருப்பினும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சகலரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment