தான் வழங்கிய ஆலோசனையை கேட்டு, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து எதிர்க்கட்சி செயற்பட்டிருந்தால் அக்கட்சியின் உறுப்பினர்கள் தொகை குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருக்கும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு கடந்தமுறை கிடைத்த வாக்குகள் இம்முறை கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, 50 அல்லது 100 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டிருந்தால் குறிப்பிடத்தக்களவு உறுப்பினர்களை அதிகரித்திருக்க முடியும் எனவும் குறிப்பாக, கொழும்பில் மாத்திரமாவது அவ்வாறு செயற்பட்டிருக்கலாம் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபை தேர்தலின் முடிவுகளையடுத்து நேற்று (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு தெரிவித்த அவர், ஐந்து வருடங்களுக்குப் பின் எமது கட்சி யானை சின்னத்தில் போட்டியிட்டது. இதனை ஒரு திருப்புமுனையாக பார்க்க முடியும். சில பிரதேசங்களில் எமக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைத்துள்ளன. இதில் திருப்திப்பட முடியும்.
ஐக்கிய தேசியக் கட்சி புதிதாக வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். தற்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களுக்கு சில வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது.
குறிப்பாக, நான் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. இளைஞர் தலைமைத்துவங்கள் அதனை முன்னெடுத்துச் செல்வதற்காக அவர்களிடம் ஒப்படைத்தேன். தற்போதுள்ள பலத்துடன் நாம் முன்னோக்கிச் செல்வது எப்படி என்பது தொடர்பாக சிந்திக்க வேண்டியுள்ளது.
யானை சின்னத்தில் போட்டியிட்டால் மக்கள் வாக்களிக்க முன்வருவார்கள் என சிலர் தெரிவித்தார்கள். அவ்வாறு போட்டியிட்டிருந்தால் மக்கள் வாக்களிக்க முன்வந்திருக்க மாட்டார்கள் என்பது இப்போது புலப்படுகிறது.
இப்போது, கட்சியில் புதியவர்களை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. இந்தக் கட்சியை 40 மற்றும் 50 வயதுள்ளவர்களே கட்டியெழுப்ப வேண்டும். தற்போதிருந்து, புதிய தலைமுறையினர் பொறுப்புக்களை ஏற்று முன்னோக்கிச் செல்ல வேண்டும். அந்த வகையில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் கடந்த முறை கிடைத்த வாக்குகள் இம்முறை கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment