இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொன் விழாவும், உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாவது மாநாடும், 9 ஆம் 10 ஆம் 11 ஆம் திகதிகளில், இந்தியா - தமிழ் நாடு, திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியில் நடைபெற ஏற்பாடாகி உள்ளன.
“இணைப்பே இலக்கியம்” என்பதே, இம்மாநாட்டின் சிறப்பு முழக்கமாகும்.
இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகள், இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவர் பேராசிரியர் முனைவர் சேமுமு. முகமதலி, பொதுச் செயலாளர் பேராசிரியர் முனைவர் மு.இ. அகமது மரைக்காயர், பொருளாளர் எஸ்.எஸ். ஷாஜஹான் உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கையில் இருந்தும் மாநாட்டு இணைப்பாளர்களாக பொறியியலாளர் நியாஸ் ஏ. சமத், டாக்டர் தாஸிம் அஹமத் ஆகியோர் செயற்பட்டு வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவை சபாநாயகர், அமைச்சர்கள், மூத்த அறிஞர்கள், அரசியல் மற்றும் சமுதாயத் தலைவர்கள், உலமாப் பெருந்தகைகள், படைப்பாளர்கள் முதலான பலரும் பல்வேறு நாடுகளிலிருந்தும் மாநாட்டில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இலங்கையில் இருந்தும் பிரதி சபாநாயகர் டாக்டர் றிஸ்வி சாலி, பிரதியமைச்சர் அஷ்ஷெய்க் முனீர் முளப்பர், பாராளுமன்ற உறுப்பினர்களான முன்னாள் அமைச்சர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் எம்.பி. ஆகியோரும் பங்கு கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஓமான், குவைத், கட்டார், சவூதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் அதிக பேராளர்கள் பங்குபற்றும் இம்மாநாட்டில், இலங்கையில் இருந்தும் சுமார் 60 பேராளர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
உலகெங்கிலுமுள்ள இஸ்லாமியத் தமிழ் இலக்கிய அறிஞர்கள், கல்வியாளர்கள், படைப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பற்றிய விவரக் குறிப்புக்களும், ஒளிப்படங்களும் அடங்கிய “யார் – எவர்” எனும் நூல் மாநாட்டில் வெளியிடப்படவுள்ளது.
மாநாட்டில் ஆய்வரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், மார்க்க அறிஞர் அரங்கம், தீனிசை அரங்கம், மகளிர் அரங்கம், ஆய்வுக் கோவை, மாநாட்டுச் சிறப்பு மலர், இலக்கியக் கழக நூல்கள் முதலியனவும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளன.
மாநாட்டின் தொடக்க விழா, நாளை (09) வெள்ளிக்கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு, இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவர் பேராசிரியர் சேமுமு. முகமதலி தலைமையில் இடம்பெறும்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல்நாள் நிகழ்வில் பிரதம அதிதியாகப் பங்குகொண்டு சிறப்புரையாற்றும் இம்மாநாட்டில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தொடக்கவுரையாற்றவுள்ளார்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் “ஒன்பதாவது மாநாட்டின் சிறப்பு மலர், ஆய்வுக்கோவை, யார் - எவர்” ஆகிய நூல்களை வெளியிட்டு வைக்கவுள்ளார்.
பேராசிரியர் முனைவர் தி.மு. அப்துல் காதர் தலைமையில் 20 உலகக் கவிஞர்கள் குழு அடங்கிய “சிறப்புக் கவியரங்கம்” ஒன்றும் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா தலைமையில் அரங்கேறும் “மகளிர் அரங்கம்” நிகழ்வில் 150 பெண் ஆர்வலர்கள் பங்கேற்கவுள்ளனர்.
சமுதாயப் பாடகர்கள் கலந்து கொள்ளும் “தீனிசைத்தென்றல் அரங்கம்” நிகழ்வில் 12 பிரபல இஸ்லாமியப் பாடகர்களும் கலந்து, மக்களை இன்னிசை மழையில் நனைய வைக்கவுள்ளனர்.
நீதி அரசர் ஜீ.எம். அக்பர் அலி தலைமையில் இடம்பெறும் இறுதி நாள் நிகழ்வில், “நூல்கள் வெளியிடல், விருதுகள் வழங்கல்” முதலான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், “ஊடக அரங்கு” நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்களுக்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றையும் நெறிப்படுத்த உள்ளார்.
இச்சிறப்பு மாநாட்டின் முக்கிய சிறப்பம்சமாக, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு கலந்துகொண்டு அறிஞர்கள், எழுத்தாளர்கள் 26 பேருக்கு, 20 ஆயிரம் இந்திய ரூபா பெறுமதி வாய்ந்த பொற்கிழிகளும், “இலக்கியச் சுடர்” விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டு பாராட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Vidivelli
No comments:
Post a Comment