உள்ளூராட்சித் தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி : 339 மன்றங்களுக்காக 72,000 வேட்பாளர்கள் போட்டி : பணியில் 70,000 பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 4, 2025

உள்ளூராட்சித் தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி : 339 மன்றங்களுக்காக 72,000 வேட்பாளர்கள் போட்டி : பணியில் 70,000 பொலிஸார்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளைமறுதினம் 6 ஆம் திகதி நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏழு வருட இடைவெளிக்குப் பின்னர் அடிமட்ட ஜனநாயகத்திற்கு குறிப்பிடத்தக்க திரும்புதலைக் குறிக்கும் வகையில் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்புக்கமைய, பொதுக் கூட்டங்கள் மற்றும் உரைகள் உட்பட அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நேற்று (03) நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளன.

பாதுகாப்பு மற்றும் நேர்மையான வாக்களிப்பு செயல்முறையை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் 70,000 க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்த தேர்தலில் 72,000 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதாக ரத்நாயக்க கூறினார். 

பெண் பிரதிநிதித்துவத்திற்கான 25 சதவீத ஒதுக்கீட்டின்படி வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யாத சில வேட்பாளர் பட்டியல்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மேலும், கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி மற்றும் காலி உட்பட 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளை உள்ளடக்கிய 339 உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இந்த உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெறுகிறது.

நேற்று நள்ளிரவுக்குப் பின்னர் எந்த ஒரு வேட்பாளரும் தேர்தல் தொடர்பான எத்தகைய பிரசார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நேற்றையதினம் நடைபெற்ற இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களின் காணொளி மற்றும் தகவல்களை தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் பிரதான செய்தி ஒளி/ஒலிபரப்பு ஒன்றில் மாத்திரம் வெளியிட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான 524 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை தபால் மூலம் இதுவரை பெற்றுக் கொள்ளாத வாக்காளர்கள் தமது கடிதங்கள் வரும் தபால் நிலையத்திற்கு சென்று தமது ஆளடையாளத்தை உறுதி செய்து அதை பெற்றுக் கொள்ள முடியும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் நடைபெறும் மே 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணி வரை வாக்காளர் அட்டைகளை வாக்காளர்கள் அவ்வாறு பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றங்களுக்காக 43 வேட்பாளர்களும் 190 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் 41 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment