(எம்.மனோசித்ரா)
அமெரிக்கா ஏற்றுமதி வரி அதிகரிப்புக்கான நகர்வுகளை ஆரம்பித்தபோதே அங்குள்ள இலங்கை தூதுவர் இது குறித்து எமக்கு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். காரணம் டொனால்ட் ட்ரம்ப் ஓர் இரவில் இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை. எனவே இனியாவது துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அமெரிக்காவின் வரி அதிகரிப்பு குறித்து துரித பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும். நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 12 இலட்சம் பேர் ஏற்றுமதித் துறைசார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்களாகவுள்ளனர். ஆடை தொழிற்துறை, இறப்பர், தேயிலை, தேங்காய் உள்ளிட்டவை இதில் பிரதானமானவையாகும்.
அமெரிக்க இறக்குமதிகளுக்கான வரிகளைக் குறைத்து சமநிலைப்படுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளின் ஊடாகவே இந்த நெருக்கடியை சமாளிக்க முடியும். இவ்வாறான பிரச்சினை வரும் என்பதை அறிந்திருந்ததன் காரணமாகவே மார்ச் மாதத்திலேயே பாராளுமன்றத்தில் நாம் இது குறித்து கேள்வியெழுப்பியிருந்தோம்.
வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் இலங்கை போன்ற நாடுகளுக்கு இவ்வாறு வரி விதிப்பது உண்மையில் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இந்த முறைமையானது வறுமையிலுள்ள நாடுகளை மேலும் வறுமைக்குட்படுத்துவதாகவே அமையும்.
சர்வதேச நாணய நிதியம் ஏற்றுமதிகளை அதிகரிக்குமாறு கூறுகிறது. ஆனால் மறுபுறம் சலுகைகளையும் குறைக்குமாறும் கூறுகின்றது. ஏற்றுமதியாளர்களுக்கு எந்தவொரு எதிர்பார்ப்புக்களையும் வழங்காது எம்மால் அதனை நடைமுறைப்படுத்த முடியாது என நாம் சர்வதேச நாணய நிதியத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும். அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகமும் இது குறித்து பேசுவதற்கு அஞ்சுகிறது.
அமெரிக்கா இந்த நகர்வுகளை ஆரம்பித்தபோதே அங்குள்ள இலங்கை தூதுவர் இது குறித்து எமக்கு தெளிவுபடுத்தியிருக்கலாம். காரணம் டொனால்ட் ட்ரம்ப் ஓர் இரவில் இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை.
தேர்தல் காலத்திலிருந்தே ஏற்றுமதியாளர்களுக்கு வரிமுறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும் என்பதை ட்ரம்ப் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தார். அதற்கமையவே 2ஆம் திகதி அந்த முறைமை என்ன என்பது அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே உரிய தரப்பினருடன் கலந்துரையாடி ஏதேனுமொரு முடிவை எட்ட வேண்டும்.
2014 இல் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நீக்கப்பட்டது. நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் நல்லாட்சி அரசாங்கம் 2016 இல் அதனை மீளப் பெற்றுக் கொண்டது. அந்த வழிமுறைகளை தற்போதைய அரசாங்கமும் கடைபிடிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment