நகைக் கடை வர்த்தகரை சித்திரவதை செய்த விவகாரம் : நாட்டைவிட்டு தப்பியோட முயற்சித்த கான்ஸ்டபிள் விமான நிலையத்தில் கைது : ஏனையோர் தொடர்பில் சி.ஐ.டி. விசாரணை மந்தகதியில் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 17, 2025

நகைக் கடை வர்த்தகரை சித்திரவதை செய்த விவகாரம் : நாட்டைவிட்டு தப்பியோட முயற்சித்த கான்ஸ்டபிள் விமான நிலையத்தில் கைது : ஏனையோர் தொடர்பில் சி.ஐ.டி. விசாரணை மந்தகதியில்

நீர்­கொ­ழும்பு அவேந்ரா ஹோட்டல் சூறை­யா­டப்­பட்ட சம்­ப­வத்­தோடு, குளி­யா­பிட்­டிய நகரில் தங்க நகை வர்த்­த­கத்தில் ஈடு­படும் வர்த்­தகர் சாஹுல் ஹமீட் மொஹம்மட் சுபைக்கை தொடர்­பு­ப­டுத்தி, கைது செய்து, சித்­தி­ர­வதை செய்­தமை தொடர்பில் நீர்­கொ­ழும்பு வலய குற்றத்­த­டுப்பு பிரிவின் முன்னாள் பொலிஸ் கான்ஸ்­டபிள் அமல் சஞ்ஜீவ குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்­தி­னரால் கைது செய்யப்பட்­டுள்ளார்.

நாட்டை விட்டு தப்பிச் செல்ல குறித்த பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் முனைந்­த­போது அவரைக் கைது செய்த சி.ஐ.டி.யினர் அவரை கைதில் இருந்த நபரை தாக்கி துன்பு­றுத்தி பணம், தங்க நகை­களை பலாத்­கா­ர­மாக பெற்­றுக்­ கொண்­டமை தொடர்பில் குளி­யா­பிட்­டிய நீதிவான் நீதி­மன்றில் தொட­ரப்­பட்­டுள்ள பீ 44028/23 எனும் வழக்கில் ஆஜர் செய்­தனர். 

இதன்­போது குறித்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரை எதிர்­வரும் 25ஆம் திக­தி­ வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க குளி­யா­பிட்­டிய நீதிவான் நீதிமன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

நீர்­கொ­ழும்பு அவேந்ரா ஹோட்டல் சூறை­யா­டப்­பட்ட சம்­ப­வத்­தோடு, குளி­யா­பிட்­டிய நகரில் தங்க நகை வர்த்­த­கத்தில் ஈடு­படும் வர்த்­தகர் சாஹுல் ஹமீட் மொஹம்மட் சுபைக்கை தொடர்­பு­ப­டுத்தி, கைது செய்து, சித்­தி­ர­வதை செய்­தமை தொடர்பில், அவ்­வர்த்­த­கரால் தாக்கல் செய்­யப்­பட்ட எஸ்.சி.எப்.ஆர். 11/24 எனும் அடிப்­படை உரிமை மீறல் மனு ஜூன் 13 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்ளப்பட­வுள்ள பின்­ன­ணியில், குறித்த கான்ஸ்­டபிள் கைது செய்யப்­பட்­டுள்ளார். 

எனினும் ஏனைய சந்­தேகநபர்­க­ளான பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்ய, விசா­ர­ணை­களை முன்னெடுக்கும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் விஷேட விசா­ரணை பிரிவு (பொலிஸ்) இது­வரை நட­வ­டிக்­கை­களை முன்னெடுத்­த­தாக தெரி­ய­வில்லை.

கடந்த வாரம் இது தொடர்­பி­லான வழக்கு குளி­யா­பிட்­டிய நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு வந்­த­போது, சி.ஐ.டி.யினர் மன்றில் ஆஜராகி மேல­திக விசா­ரணை அறிக்கை ஒன்­றினை சமர்ப்­பித்­தனர். இதன்­போது சந்­தேகநப­ருக்கு பிணை கோரப்­பட்­டது. அதற்கு சி.ஐ.டில் தரப்பில் பெரி­தாக எதிர்ப்­புக்கள் எதுவும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

எனினும் பாதிக்­கப்­பட்ட வர்த்­தகர் சாஹுல் ஹமீட் மொஹம்மட் சுபைக் சார்பில் சட்­டத்­த­ரணி ஷஹ்மி பரீட்­டுடன் மன்றில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், சந்­தேகநப­ருக்கு பிணை­ய­ளிக்க எதிர்ப்பு தெரி­வித்து விட­யங்­களை முன்­வைத்தார்.

பாதிக்­கப்­பட்ட வர்த்­தகர் சாஹுல் ஹமீட் மொஹம்மட் சுபைக் பாதிக்­கப்­பட்டோர் மற்றும் சாட்­சிகள் பாது­காப்பு அதி­கார சபையினால் பாரிய அச்­சு­றுத்தல் உள்ள நப­ராக பெயரிடப்பட்டுள்ளவர் எனவும், அவ­ருக்கு அச்­சு­றுத்தல் நிலவும் சூழலில், ஏனைய சந்­தேகநபர்கள் இது­வரை கைது செய்­யப்­ப­டாத நிலையில், கைது செய்­யப்­பட்­டுள்­ள­வ­ருக்கு பிணை­ய­ளிக்கக் கூடாது என கோரினார்.

சந்­தேகநபர் வெளி­நாட்­டுக்கு தப்பிச் செல்ல முயன்றபோதே கைதாகி­யுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டிய சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், இவை பிணை மறுக்க கவ­னத்தில் கொள்­ளப்­படல் வேண்டும் என சுட்­டிக்­காட்டி, உயர் நீதி­மன்றில் நிலு­வையில் உள்ள அடிப்­படை உரிமை மீறல் மனு தொடர்­பிலும் விட­யங்­களை முன்­வைத்தார்.

இந்த நிலையில் விட­யங்­களை பரி­சீ­லித்த குளி­யா­பிட்­டிய நீதிவான், சந்­தேகநப­ரான பொலிஸ் கான்ஸ்­ட­பி­ளுக்கு பிணை தொடர்பில் ஆராய இது நேர­மல்ல என குறிப்­பிட்டு பிணையை மறுத்து அவரை எதிர்­வரும் 25 ஆம் திக­தி ­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்தரவிட்டார்.

கடந்த 2022 ஜூன் 13 ஆம் திகதி மனு­தா­ரரின் வர்த்­தக நிலை­யத்தின் முகா­மை­யாளர் எனக் கூறப்­படும் நபரை அச்­சு­றுத்தி, பொலிஸ் பரிசோ­தகர் மனோ­கர எனும் அதி­காரி தலை­மை­யி­லான குழு தன்னை இலக்கு வைத்­த­தாக மனு­தாரர் இதற்கு முன்னர் உயர் நீதிமன்­றுக்கு தெரி­வித்­தி­ருந்தார்.

இந்நிலையில் மனு­தா­ர­ரான சாஹுல் ஹமீட் ஷெய்க் எனும் சாஹுல் ஹமீட் மொஹம்மட் சுபைக் என்ற, பாத்­தி­ மா­வத்த, மத­கொட்­ராமுல்ல பகு­தியைச் சேர்ந்த மனு­தா­ரரை சட்டவிரோ­த­மாக கைது செய்து, பல நாட்கள் தடுத்து வைத்­தி­ருந்­த­தாக சி.ஐ.டி­யினர் பதிவு செய்­துள்ள வாக்குமூலங்கள் ஊடாக தெரி­ய ­வந்­துள்­ளது. 

கடந்த 2023 ஜூலை 25 ஆம் திகதி, பாதிக்­கப்­பட்ட வர்த்­தகர் ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு செய்த முறைப்­பாடு பின்னர் பொலிஸ்மா அதிபர் ஊடாக சி.ஐ.டி.க்கு கைய­ளிக்­கப்­பட்­டதை அடுத்து இந்த விசாரணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­ட­தாக சி.ஐ.டி.யினர் குளி­யா­பிட்­டிய நீதிவான் நீதி­மன்­றுக்கு அறிக்கை சமர்ப்­பித்­துள்­ளனர்.

சிவில் உடையில் வந்த, நீர்­கொ­ழும்பு வலய குற்­றத்­ த­டுப்பு அதிகாரிகள் எனக் கூறிக்­கொண்ட குறித்த 6 பேர், மனு­தா­ரரின், இலக்கம் 2, பிர­தான வீதி, குளி­யா­பிட்­டிய எனும் முக­வ­ரியில் அமைந்துள்ள நகைக் கடையில் இருந்த தங்க நகை­களை பொய்யான குற்­றச்­சாட்­டுக்­களை முன்வைத்து கொள்ளையடித்ததாக முறைப்­பாட்­டிலும், உயர் நீதி­மன்ற அடிப்­படை உரிமை மீறல் மனு­விலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அர­கல போராட்­டத்தை தொடர்ந்து நீர்­கொ­ழும்பு அவேந்ரா ஹோட்டலில் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட தங்­கமும், ஒரு தொகை டொலரையும், மனு­தாரர் கொள்­வ­னவு செய்­த­தாக பொலிஸார் அச்சுறுத்தி, நகைக் கடையில் இருந்த நகை­களை கொள்ளையிட்டதாக சட்­டத்­த­ரணி சுட்­டிக்­காட்டி, அதற்­கான ஆதாரமாக கடையில் இருந்த சி.சி.ரி.வி. காட்­சி­களின் பிர­தி­க­ளையும் உயர் நீதி­மன்­றுக்கு இதற்கு முன்னர் சமர்ப்­பித்­தி­ருந்தார்.

அவ்­வாறு கடை­யி­லி­ருந்து பொலிசார் கொள்­ளை­யிட்ட நகை­களின் ஒரு பகு­தியை, திரு­டப்­பட்ட தங்கம் எனக் கூறி நீதி­மன்றில் முன்னிலைப்­ப­டுத்­தி­யுள்­ள­துடன், அவை திரு­டப்­பட்­டவை அல்ல எனவும் அதற்­கான பற்­றுச்­சீட்­டுகள் இருப்­ப­தையும், ஒரு தொகை தங்கத்தை பொலிசார் நீதி­மன்றில் கூட முன்­னி­லை­ப்ப­டுத்­த­வில்லை எனவும் பாதிக்­கப்­பட்ட வர்த்­த­கரின் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் உயர் நீதி­மன்­றுக்கு இதற்கு முன்னர் அறி­வித்­தி­ருந்தார்.

இத­னை­விட, சுமார் 48 மணி நேரம் பொலிசார் எந்த நீதி­மன்­றிலும் முன்­னி­லைப்­ப­டுத்­தாது மனு­தா­ரரை, நீர்­கொ­ழும்­புக்கு அழைத்துச் சென்று பொலிஸ் அத்­தி­யட்சர் அலு­வ­ல­கத்தில் தடுத்து வைத்து, அவரின் உடை­களை களைந்து, இரும்பு கம்பி கொண்டு தாக்கி சித்திர­வதை செய்து, குற்­றத்தை ஒப்­புக்­கொள்ள வற்புறுத்தியதாகவும், அதற்­காக அவர், பிணை பெற்ற பின்னர் குளியா­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்ற நிலையில் வைத்­தி­ய­சாலை அறிக்­கைகள் அதனை உறுதி செய்­வ­தா­கவும் உயர் நீதி­மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த இலையில் உயர் நீதி­மன்றில் நிலு­வையில் உள்ள அடிப்­படை உரிமை மீறல் மனுவின் முதல் 6 பிர­தி­வா­தி­க­ளான நீர்­கொ­ழும்பு வலய குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரிசோ­தகர் கிஹான் மனோ­ஹர, அப்­பி­ரிவின் சார்ஜன் சிந்­தக, பொலிஸ் கான்ஸ்­ட­பிள்­க­ளான அமல் சஞ்­ஜீவ, வி.ஜி. பண்­டார,டி.எம்.பி. திஸா­நா­யக்க,கே.ஆர்.டி. குல­துங்க ஆகி­யோ­ருக்கு எதி­ராக குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் ஊடாக குற்­ற­வியல் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டன. அதன் பிர­கா­ரமே ஒருவர் தற்­போது கைது செய்யப்­பட்­டுள்ளார்.

இந்த நிலையில், சி.ஐ.டி.யினர் குளியாபிட்டிய நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அறிக்கை பிரகாரம், தண்டனைச் சட்டக் கோவையின் 333,373 மற்றும் 380 ஆம் அத்தியாயங்களின் கீழ் குற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகள் தொடர்வதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட வர்த்தகரிடம் இருத்து சுமார் 10 ஆயிரம் அமரிக்க டொலர்கள் (39 இலட்சம் ரூபா), ஒரு தொகை தங்கம், நகைகள் பலாத்காரமாக பெறப்பட்டுள்ளமையும் அதற்காக அவர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளமையும் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்கு மூலங்கள் ஊடாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையிலேயே சி.ஐ.டி.யினர் இந்த விவகாரத்தில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Vidivelli

No comments:

Post a Comment