வெளிநாட்டில் பணிபுரிவோர் மார்ச் மாதத்தில் 693.3 மில்லியன் டொலர் பணத்தை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது இலங்கை ரூபாவில் 205.2 பில்லியனாகும்.
வாராந்த பொருளாதார குறிகாட்டி அறிக்கையில் இலங்கை மத்திய வங்கியி இதனைத் தெரிவித்துள்ளது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 18.1 வீத அதிகரிப்பாகும்.
2024 மார்ச் மாதத்தில் 572.4 மில்லியன் டொலர் (ரூ. 175 பில்.) பணம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருடம் முதல் காலாண்டில் (2025 ஜன – மார்ச்) வெளிநாட்டில் பணிபுரிவோரால் இலங்கைக்கு 1,814.4 மில்லியன் டொலர், (ரூ. 537.6 பில்.) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, மத்திய வங்கியின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
2024 முதல் காலாண்டில் 1,536.1 மில்லியன் டொலர் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வரலாற்றில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களிடமிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரண்டாவது அதி கூடிய தொகை இதுவாகும்.
கடந்த 2020 டிசம்பர் மாதம் வெளிநாட்டில் பணிவோரால் 812.7 மில்லியன் டொலர் பணம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமையே இப்பிரிவில் இதுவரை இலங்கை பெற்றுக் கொண்ட அதிகூடிய தொகையாகும்.
இதேவேளை, இவ்வருடம் மார் மாதம் வரை 722,276 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 13.6% அதிகரிப்பாகும்.
சுற்றுலாப் பயணிகளிடமிருந்து இக்காலப் பகுதியில் 1,122.3 மில்லியன் டொலர் (ரூ. 32.5 பில்) வருமானமாகப் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment