நிமேஷின் மரணம் : 5 சாட்சியாளர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 30, 2025

நிமேஷின் மரணம் : 5 சாட்சியாளர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக கூறப்படும் 26 வயதுடைய நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் மரணம் தொடர்பான சாட்சியங்களின் விசாரணைகளை, மே மாதம் 16ஆம் திகதி முதல் ஆரம்பிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டது.

அதன்படி, சம்பந்தப்பட்ட விசாரணையில் சாட்சியமளிக்க அன்றையதினம் 5 சாட்சியாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட முந்தைய உத்தரவின்படி, இறந்த இளைஞனின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

அதன்படி, மூவர் அடங்கிய வைத்திய குழுவால் அந்த சடலத்தை மீண்டும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும், அதன் முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட இறந்தவரின் உடலின் சில பாகங்கள் பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, இந்த மரணம் தொடர்பான நீதவான் விசாரணையின் போது 22 சாட்சியாளர்களிடமிருந்து சாட்சியங்களைப் பதிவு செய்ய எதிர்பார்ப்பதாகவும், அதில் 5 சாட்சியாளர்களுக்கு அடுத்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தைக் கோரினர்.

இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த நீதவான், அந்த சாட்சியாளர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்குமாறு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment