(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எமது அரசாங்கம் கடுமையான சூழ்நிலையில் பல புதிய சட்டங்களை இயற்றியதால்தான் நாடு இன்று பொருளாதார ரீதியில் ஸ்திரமடைந்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. எம்மால் முன்வைக்கப்பட்ட சட்ட வரைபுகளை திருத்தங்களுடன் சட்டமாக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறேன் என்று முன்னாள் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (01) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துக்கு பின்னரான காலப்பகுதியில் நீதி இராஜாங்க அமைச்சராக செயற்பட்டேன். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசிய காரணிகளை கருத்திற் கொண்டு பல சட்டங்களை இயற்றினோம். 2022 ஆம் ஆண்டு 14 சட்டங்களும், 2023 ஆம் ஆண்டு 11 சட்டங்களும், 2024 ஆம் ஆண்டு 11 சட்டங்களும் இயற்றப்பட்டன.
கடுமையான சூழ்நிலையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டதால்தான் நாடு இன்று பொருளாதார ரீதியில் ஸ்திரமடைந்துள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். 90 சட்ட வரைபுகள் குறித்த குழுக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆகவே அவற்றை சட்டமாக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம்.
நீதிமன்ற கட்டமைப்பு முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்பபட வேண்டும். இதற்கு குறைந்தது 3.2 பில்லியன் ரூபா செலவாகும் என்ற மதிப்பிடப்பட்டது. தற்போதைய பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அது சாத்தியமற்றது என்பதை அறிவோம். இருப்பினும் நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்பாட்டை கட்டம் கட்டமாக முன்னெடுக்க வேண்டும்.
ஏதேனும் குற்றச்செயலின் சந்தேகநபராக கருதப்படும் நபரை வீட்டுத் தடுப்புக் காவலில் வைக்கும் வகையில் சட்டத்திருத்த வரைபியை முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அமைச்சரவைக்கு முன்வைத்திருந்தார். ஆகவே இந்த வரைபை சட்டமாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலை குறைப்பதற்கு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
2024 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவை சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. தடுப்புக் காவலில் இருந்த சந்தேகநபருக்கு தண்டனை தீர்ப்பு வழங்கும்போது அந்த நபர் தடுப்புக்காவலில் இருந்த காலத்தையும் அவரது தண்டனை காலத்துக்குள் உள்ளடக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இந்த சட்டத்துக்கான ஒழுங்கு விதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment