வட்டுவாகல் விகாரையின் கீழ் சரணடைந்தோர் புதைக்கப்பட்டுள்ளனர், ஆய்வுகளை மேற்கொண்டு உண்மையைக் கண்டறியுங்கள் - நீதி அமைச்சை கோரினார் ரவிகரன் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Saturday, March 1, 2025

வட்டுவாகல் விகாரையின் கீழ் சரணடைந்தோர் புதைக்கப்பட்டுள்ளனர், ஆய்வுகளை மேற்கொண்டு உண்மையைக் கண்டறியுங்கள் - நீதி அமைச்சை கோரினார் ரவிகரன் எம்.பி

கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் கீழ் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக மக்கள் பலரும் தம்மிடம் முறையிட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

எனவே மடியில் கனமில்லையெனில் விகாரையை அகற்றி அகழ்வினை மேற்கொண்டோ, நவீனமுறையில் ஸ்கேன் கருவிகள் மூலமோ ஆய்வுகளை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய அரசாங்கம் முன்வர வேண்டுமென இதன்போது நீதி அமைச்சையும் கோரியுள்ளார்.

பாராளுமன்றில் 01.03.2025 இன்று இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நீதி மற்றும் தேசிய ஒற்றுமைப்பாடு அமைச்சிற்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி நீதியை வழங்குமாறும், அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்,கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம், அரச திணைகளங்கள் மற்றும் அரச படைகளால் தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படும் விவகாரங்கள் என்பவற்றிற்கும் நீதியை வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நீதி அமைச்சைக் கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசு இதுவரை இனவாதம் பேசவில்லை. வரவேற்கின்றோம். தமிழர்கள் இந்த நாட்டில் ஒரு பலமான சக்தி. இதனை முழு மனதோடு ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் நாம் நீதி கேட்கின்றோம்.

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுதல் வேண்டும். ஜனாதிபதியும் தனது நேற்றைய உரையில் குறிப்பிட்டிருந்தார். நடந்தால் வரவேற்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.

யுத்தம் மௌனிக்கப்பட்டபோது தமது உறவுகளை, குறிப்பாக கணவரை மனைவியும், மகன், மகளை பெற்றோரும் வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலய முன்றலில் ஒப்படைத்தார்கள். தடுப்பு முகாம்கள், கடல் எனப் பல இடங்களிலும் சரணடைந்தார்கள்.

வட்டுவாகலில் ஒப்படைக்கப்பட்டவர்களை கொக்குத் தொடுவாய் நோக்கியும், கேப்பாப்புலவு நோக்கியும், வட்டுவாகல் கடற்கரை நோக்கிய பாதையிலும் பஸ்களில் கொண்டுசெல்லப்பட்டார்கள். இலங்கைப் படையினரிடம்தான் ஒப்படைத்தோம். இன்னும் காணவில்லையே அவர்கள் எங்கே என்று தேடுகின்றார்கள். கௌரவ நீதிஅமைச்சரே நீதி தாருங்கள். நியாயப்படி நடந்து கொள்ளுங்கள்.

வட்டுவாகல் கடற்கரைப் பாதை நோக்கி பேருந்தில் ஏற்றிக் கொண்டு சென்றவர்களை விட்டுவிட்டு பேருந்துகள் மட்டும் திரும்பி வந்ததாகவும் மக்கள் சொல்கின்றார்கள். வட்டுவாகல் தனித் தமிழ் சைவக்கிராமமாகும். பௌத்தர்கள் இல்லாத இடத்தில் ஒரு பெரியவிகாரை அமைக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்தவர்களை கொண்டுசென்று, படுகொலை செய்து புதைத்து விட்டு அதன் மேல் இவ்வாறு பெரிய விகாரை இங்கு அமைத்துவிட்டதாத மக்கள் கூறுகின்றனர். உங்களின் மடியில் கனமில்லை என்றால் இதனை நிரூபியுங்கள்.

விகாரையை அகற்றி ஆழமாகத் தோண்டுங்கள். அல்லது புதிய தொழில்நுட்ப முறையில் ஆழத்தில் இருப்பவற்றை அறியக்கூடியதான நவீன கருவிகளைப் பயன்படுத்தி உண்மையை வெளிப்படுத்துங்கள். கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழிக்கும் நீதியைத் தாருங்கள்.

சிலவேளை நீங்கள் நீதியைத் தரும்போது, நீதிபதி சரவணராஜா போல்தான் உங்களுக்கும் நீதி கிடைக்குமோ தெரியாது. ஆனால் இன்றைய அரசை நம்புவோம்.

அதேபோல் முல்லைத்தீவில் மக்களின் காணிகள் அரச திணைக்களங்களால் அபரிக்கப்பட்டுள்ளன. 2009ஆம் ஆண்டிற்கு முன்பு 2,22006 ஏக்கர்தான் அடர்ந்த காடுகள் உட்பட வன இலாகாவின் கீழ் இருந்தது. 2009ஆம் ஆண்டின் பிற்பாடு 4,32121 ஏக்கர் காணிகள் வன இலாகாவிடம் உள்ளது.

மக்களுடைய பயன்பாட்டில் இருந்த சிறுதானியப் பயிர்ச் செய்கை, தோட்டப் பயிர்ச் செய்கை, நெற் பயிர்ச் செய்கை செய்த மக்களின் காணிகளை, கிராம அலுவலர், காணி உரிமையாளர்கள், பிரதேச செயலாளர், மாவட்டச் செயலாளர் யாரிடமும் கேட்காமல் எல்லைக் கற்களையிட்டு தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார்கள். இந்நிலையில் தங்களுடைய வாழ்வாதாரத்துக்குரிய பயன்பாட்டில் இருந்த காணிகள் இல்லாது மக்கள் படும் துன்பங்கள் ஏராளம். நான் குறிப்பிடும் விடயங்கள் முல்லைத்தீவில் மட்டுமல்ல மன்னார், வவுனியாவிலும் உள்ளது.

படையினரும் எமது மக்களின் வாழ்வாதார மற்றும் குடியிருப்புக் காணிகளை அபகரித்து வைத்துள்ளனர். முல்லைத்தீவில் 100 க்கு மேற்பட்ட படையினர் முகாம்கள் காணப்படுகின்றன. அங்கிருக்கும் மக்கள் தொகையின் அரைவாசிக்கு படையினர் அதாவது இரண்டு மக்களுக்கு ஒரு படையினர் காணப்படுகின்றனர். கிட்டத்தட்ட 35000 ஏக்கர் காணிகள் படையினரிடம் காணப்படுகின்றன.

இதில் பெரும்பகுதி காணிகள் மக்களுடைய வாழ்வாதாரத்துக்குரியதும், குடியிருப்புக் காணிகளுமாகும். இப்படி இருக்க நாங்கள் எப்படி பாதுகாப்பு அமைச்சின் வாக்களிப்பில் ஆதரிப்பது. எனவே கௌரவ நீதிஅமைச்சர் அவர்களே இந்த விடயங்களுக்கு நீதி தாருங்கள் என்று கேட்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment