பிரதேச செயலகத்தை மாற்றும் தீர்மானத்துக்கு நாங்கள் உடன்படவில்லை : மக்களின் தேவை, கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயற்படுங்கள் - இராதாகிருஷ்ணன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 4, 2025

பிரதேச செயலகத்தை மாற்றும் தீர்மானத்துக்கு நாங்கள் உடன்படவில்லை : மக்களின் தேவை, கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயற்படுங்கள் - இராதாகிருஷ்ணன்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நோர்வூட் பிரதேச செயலகத்தை ஹட்டன் பகுதிக்கு மாற்றும் தீர்மானத்துக்கு நாங்கள் உடன்படவில்லை. ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம். மக்களின் தேவை மற்றும் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, நல்லாட்சி அரசாங்கத்தில் பல பிரதேச சபைகள் பிரிக்கப்பட்டன. அதேபோல் பிரதேச செயலகங்களும் பிரிக்கப்பட்டன. இதற்கமைவாக பிரிக்கப்பட்ட நோர்வூட் பிரதேச செயலகத்தை தற்போது ஹட்டன் பகுதிக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிய முடிகிறது. நோர்வூட் பிரதேச செயலகத்தை பிறிதொரு இடத்துக்கு மாற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த மாதம் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் பற்றி பேசப்பட்டதாகவும், நான் அதில் கலந்து கொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. நான் அன்றையதினம் அக்கூட்டத்தில் மதியவேளை வரையில் இருந்தேன். இருப்பினும் நான் இல்லாத சந்தர்ப்பத்தில்தான் அதாவது மாலையில்தான் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதற்கும் எனக்கும் தொடர்பில்லை.

செயலக பிரிவை ஹட்டனுக்கு மாற்றியமைக்கும் தீர்மானத்துக்கு நாங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.

நோர்வூட் பகுதியில் 177,938 பேர் வசிக்கிறார்கள். செயலகத்தின் 110 உத்தியோகத்தர்களுக்காக பிரதேச செயலகத்தை ஹட்டனுக்கு மாற்றுவது சரியானதா என்பதை ஆராய வேண்டும்.

இந்த பகுதியில்தான் மஸ்கெலியா, பொகவந்தலாவ ஆகிய பகுதியில் வசிக்கும் உத்தியோகத்தர்கள் இங்கு சேவை புரிகிறார்கள். பௌதீக வளப் பற்றாக்குறை காணப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

இந்த பகுதியில் பல அரச கட்டடிங்கள் உள்ளன, தொண்டமான் பயிற்சி நிலையம் உள்ளது. இவற்றை பயன்படுத்துங்கள். இதனை விடுத்து பிறிதொரு பகுதிக்கு செயலகத்தை கொண்டு செல்ல வேண்டாம் என்றார்.

No comments:

Post a Comment