(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
தன்னை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக்கு தெரிவு செய்துள்ளதாக ஜனாதிபதி கூறியபோதும் சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தன்னிச்சையாக செயற்பட்டு எமது பெயர்களை நீக்கியுள்ளார். அவர் ஏகாதிபதியாக செயற்படுகிறார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றம்சாட்டியதையடுத்து அவருக்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும் இடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி செலவின தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ரவூப் ஹக்கீம் எம்.பி. இந்தகுற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது தொடர்பில் ரவூப்ஹக்கீம் எம்.பி. கூறுகையில், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவை சபாநாயகர் அவசரமாக அழைத்திருக்கிறார். ஆனால் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் கட்சித் தலைவர்கள் பலரை வேண்டுமென்றே நீக்கி இருக்கின்றனர்.
பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் நான் தெரிவித்த கருத்தினால் கோபமுட்டு உங்களுக்கு வழங்கமாட்டோம் என தெரிவித்து சபை முதல்வர் எழுந்து சென்றார். அதனால் ஏகாதிபதியாக செயற்பட வேண்டாம் என அவரை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இதன்போது குறுக்கிட்ட சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நான் அவ்வாறான எந்த விடயத்தையும் தெரிவிக்கவில்லை. நீங்கள் பொய் உரைத்தீர்கள். அதனால் அதனை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். அல்லது அதன் உண்மைத்தன்மையை தேடிப்பார்த்து ஹன்ஸாட்டில் இருந்து நீக்க வேண்டும்.
அதேநேரம் பாராளுமன்ற குழுக்களுக்கு உறுப்பினர்களை அதிகரிப்பது தொடர்பில் எமது நிலைப்பாட்டை எழுத்து மூலம் தெரிவித்திருக்கிறோம். அதனால் எதிர்க்கட்சின் நிலைப்பாடு என்ன என்பதை எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவிடம் எதிர்பார்கிறோம்.
அதனால் எதிர்க்கட்சி தொடர்ந்தும் இவ்வாறுதான் செயற்படுமாக இருந்தால், பாராளுமன்ற குழுக்களுக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் பயணில்லை. அது தொடர்பில் தீர்மானிக்க வேண்டிவரும் என்றார்.
அதற்கு சபாநாயகர், அது தொடர்பில் தேடிப்பார்த்து நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.
அதனைத் தொடர்ந்து ரவூப் ஹக்கீம் தொடர்ந்து குறிப்பிடுகையில், நான் பொய்யாக எதனையும் தெரிவிக்கவில்லை. ஏனெனில் கடந்த முறை பாதுகாப்பு அமைச்சின் மீளாய்வு குழுவுக்கு ஜனாதிபதி வரும்போது, நான் அந்த இடத்தில் அமர்ந்திருந்தேன்.
இதன்போது ஜனாதிபதி என்னை ஊடறுத்து செல்லும்போது என்னை பார்த்து, ‘ரவூப் உங்களின் கோரிக்கைக்கு அமைய உங்களை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இணைத்துக் கொள்ள தீர்மானித்திருக்கிறோம்’ என ஜனாதிபதி என்னிடம் தெரிவித்து சென்றார். தேவை என்றால் ஜனாதிபதியிடம் கேட்டுப்பாருங்கள்.
ஆனால் நீங்கள் உங்களின் தனிப்பட்ட நிலைப்பாட்டுக்கு அமைய, ஜனாதிபதி எனக்கு தெரிவித்த விடயத்துக்கு எதிராக நீங்கள் எங்களை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள். தேவையென்றால் ஜனாதிபதியிடம் சென்று கேட்டுப்பாருங்கள் என மிகவும் ஆக்ரோஷமான முறையில் தெரிவித்தார்.
தொடர்ந்து தன்னை சுதாகரித்துக் கொண்ட ரவூப் ஹக்கீம், நான் கோபப்பட்டு சத்தத்தை உயர்த்தி பேசினாலும் சபை முதல்வர் அதனை பாரதூரமாக எடுத்தக் கொள்ள மாட்டார் என நான் நம்புகிறேன்.
ஏனெனில் நான் தொடர்ந்து 30 வருடங்கள் இந்த சபையில் இருந்து வருகிறேன். எனக்கு கீழ் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். கடந்த பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணிக்கு 3 உறுப்பினர்களே இருந்தனர்.
கட்சித் தலைவராக நான் நீண்ட காலமாக பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இருந்து எனது கடமையை நிறைவேற்றி வந்திருக்கிறேன். அதனால் இது தொடர்பில் சரியான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment